kalkiyin2 alai Ocai part 2
(in tamil script, TSCII format)
கல்கியின் அலை ஒசை
பாகம் 3 - 'எரிமலை'
kalkiyin2 alai Ocai
Part-I1I (erimalai)
In tamil script, TSCII format
Acknowledgements:
Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research
Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's
Works and for the help to publish them in PM in TSCII format.
Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi
Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கல்கியின் அலை ஒசை
பாகம் 3 - ' 'எரிமலை' '
உள்ளுறை -அத்தியாயங்கள்
கல்கியின் அலை ஒசை
பாகம் 3- 'எரிமலை'
முதல் அத்தியாயம் :
ஊதுவத்தி வியாபாரி
தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் ஒரு குதிரை வண்டி கடகடவென்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. வண்டிக் குள்ளே ஒரு இளம் பிரயாணி உட்கார்ந்திருந்தான். அவன் தலையிலே பல வர்ணக் கோடுகள் போட்ட உருமாலையைத் தலைப் பாகையாகக் கட்டிக் குஞ்சம் தொங்கவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தால், மத்திய இந்தியாவிலிருந்து வரும் வியாபாரியைப் போல் காணப்பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்த தகரப் பெட்டியும் துணி மூட்டையும் மேற்கூறிய ஊகத்தை உறுதிப்படுத்தின. அட்வகேட் ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலில் வந்து வண்டி நின்றது. இளைஞன் வண்டிக்குள்ளிருந்தபடியே வண்டிக்காரனுக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பெட்டியையும் ஒரு கையில் துணி மூட்டையையும் எடுத்துக்கொண்டு வண்டியி லிருந்து இறங்கினான். "நிற்கட்டுமா, சேட்; ஜல்தி வருவீர்களா?" என்று வண்டிக்காரன் கேட்டதற்கு, "நை! தும் ஜாவ்!" என்றான் அந்த வாலிபன். ஜட்கா வண்டி புறப்பட்டுச் சென்றது. "ஆத்மநாதய்யர் வீட்டு வாசலில் இரும்புக் கம்பிக் கதவண்டை அந்த வாலிபன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். ஒரு இளம் பெண்மணியின் முகம் தெரிந்தது. "ஊதுவத்தி வேண்டுமா, அம்மா! அத்தர் புனுகு ஜவ்வாது வேண்டுமா? பெனாரிஸ் ஸில்க் வேண்டுமா?" என்று அவ்வாலிபன் கேட்டதற்கு, உள்ளேயிருந்து, "ஒன்றும் வேண்டாம், போ" என்று ஒரு பெண் குரலில் பதில் வந்தது. "என்னம்மா, இப்படி ஒரேயடியாய் ஒன்றும் வேண்டாம் என்று சொல்றே? இந்த வீட்டில்தானே நாளைக்குக் குழந்தைக்குச் சஷ்டிஅப்த பூர்த்திக் கலியாணம் என்று சொன்னாங்க?" என்று சொல்லிக் கொண்டே அந்த மார்வாரி இளைஞன், பூட்டப்படாமல் வெறுமே சாத்தியிருந்த இரும்புக் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
வீட்டுத் தாழ்வாரத்துக்கும் வெளி கேட்டுக்கும் மத்தியில் இருந்த சுமார் பத்து அடி அகலமுள்ள இடத்தில் ஒரு பன்னீர் மரம், ஒரு மனோரஞ்சிதச் செடி, சில அழகிய பல வர்ணக் குரோடன்ஸ் செடிகள் ஆகியவை இருந்தன. வீட்டின் வாசல் திண்ணைக்கு அருகில் ஒரு இளம் பெண்ணும் ஒரு வயதான ஸ்திரீயும் நின்றார்கள். "பார்த்தாயோ இல்லையோ, இவன் சொல்லுகிறதை! குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகிறது; சஷ்டிஅப்தபூர்த்திக் கல்யாணமாம்!" என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தாள் அந்த இளம் பெண். "திடுதிடுவென்று உள்ளே நுழைந்து வருகிறானே? கேள்வி முறையில்லையா? கதவைப் பூட்டி வைக்கவேண்டும்!" என்றாள் வயதான ஸ்திரீ. உள்ளே நுழைந்த இளைஞன் அவர் களுடைய பேச்சைக் கவனியாதவன் போல், "அரே பாப்ரே! இங்கே இருக்கிற புஷ்பங் களில் வாசனை நம்முடைய ஊதுவத்தி, அத்தர், சவ்வாது வாசனையைத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறதே!" என்றான். பிறகு பெட்டியையும் மூட்டையையும் கொண்டு போய்த் திண்ணையில் வைத்து, "ஏன்! அம்மா! நிஜமாக ஊதுவத்தி, அத்தர், புனுகு, சவ்வாது ஒன்றும் வேண்டாமா?" என்று சொல்லிக்கொண்டே பெட்டியைத் திறந்ததும், உள்ளேயிருந்து ஊதுவத்தியின் மணம் கம் மென்று வீசிற்று. "ஏன், லலிதா! நல்ல ஊதுவத்தியாயிருக்கிறதே! கொஞ்சம் வேணுமானால் வாங்கிவைக்கலாமே?" என்று லலிதாவின் தாயார் சரஸ்வதிஅம்மாள் சொன்னாள். "ஒன்றும் வேண்டாம்! நீ கொண்டு போ, அப்பா!" என்றாள் லலிதா. "அப்படி முகத்திலடித்தது போல் சொல்லாதே, சின்னம்மா! பெரியம்மா சொல்கிறதைக் கேள்!" என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டு, சரஸ்வதிஅம்மாளைப் பார்த்து, "ஊரிலேயிருந்து கிட்டாவய்யர் வந்திருக்கிறார்களா? அவர்களுடைய மூத்தபிள்ளை கங்காதரஐயர் வந்திருக்கிறார்களா?" என்றான்.
"ஏது, ஏது! உனக்கு எல்லாரையும் தெரியும் போலிருக்கிறதே! நீ யாரப்பா?" என்று கேட்டாள் சரஸ்வதி அம்மாள். "காலம் அப்படி ஆகிவிட்டது! என்ன செய்யலாம்? பெற்ற தாய்க்குப் பிள்ளையை அடையாளம் தெரியாமல் போய்விட்டது!" என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டுத் தலையில் சுற்றியிருந்த வர்ணக் கோட்டு முண்டாசைக் கையில் எடுத்தான். "அம்மா! நம்ம சூரியாண்ணா?" என்று கூவினாள் லலிதா. "அட என் கண்ணே!" என்று சொல்லிக்கொண்டு சரஸ்வதி அம்மாள் தன்னுடைய குமாரனைக் கட்டிக்கொண்டாள். "ஏன் சூரியா! இது என்ன வேஷம்! சகிக்கவில்லையே?" என்றாள் லலிதா. "சும்மா உங்களை யெல்லாம் ஒரு தமாஷ் செய்யலாம் என்று நினைத்தேன்!" என்றான் சூரியா. உடனே சரஸ்வதி அம்மாள், "தமாஷாவது, மண்ணாங் கட்டியாவது? அழகாயிருக்கிறது! லலிதாவின் மாமனார் இப்போது கோர்ட்டிலேயிருந்து வந்துவிடுவார். உன்னை இந்தக் கோலத்திலே பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார். உன் அப்பா, அண்ணா எல்லாரும் இராத்திரி ரயிலிலே வருகிறார்கள். இந்த வேஷத்தை கலைத்துவிட்டு மறு காரியம் பார்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "ஆகட்டும்! ஆனால் வேஷத்தைக் கலைப்பதற்கு என்னை அரை மணி நேரம் தனியா இருக்க விடவேண்டும். லலிதா! மேலே உன் அகத்துக்காரர் அறை காலியா கத்தானே இருக்கிறது?" என்று சூரியா கேட்டான். லலிதா பதில் சொல்வதற்குள் சரஸ்வதி அம்மாள், "காலியாகத்தான் இருக்கிறது, ஆனால் இந்தப் பெண் அந்த அறையில் யாரும் போவதற்கு விடுவதில்லை. மாப்பிள்ளையின் படத்தை அங்கே மாட்டியிருக்கிறாள். அந்தப் படத்துக்குத் தினம் பூத்தொடுத்து மாலை போடுகிறது இவளுக்கு ஒரு வேலை! சத்தியவானுக்காகச் சாவித்திரி கூட இப்படித் தபசு இருந்திருக்க மாட்டாள்! ஏண்டாப்பா சூரியா? உனக்குச் சமாசாரம் தெரியுமோ, இல்லையோ?" என்றாள்.
"மாப்பிள்ளை ஜெயிலுக்கு போயிருக்கிறதைத்தானே சொல்கிறாய்? அது எனக்குத் தெரியாமல் இருக்குமா, அம்மா! ஆனால் பத்திரிகையிலே படித்ததும் ஒரே ஆச்சரியமாகத்தான் இருந்தது, நம்ம பட்டாபி இப்படித் துணிந்து இறங்குவான் என்று நான் நினைக்கவே யில்லை" என்றான் சூரியா. "ஆனால் ஒன்று,சூரியா! இவர் மற்றவர்களையெல்லாம் போலக் கோர்ட்டைக் கொளுத்தினார், தண்டவாளத்தைப் பெயர்த்தார், பாலத்தை உடைத்தார் என்றெல்லாம் பெயர் வாங்கிக்கொண்டு ஜெயிலுக்குப் போகவில்லை. போன அக்டோ பர் இரண்டாம் தேதி காந்தி மகான் ஜயந்தியில் காந்திஜியைச் சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்துப் பொதுக் கூட்டத்தில் பேசினார். அதற்காக இவரைப் பிடித்துப் போட்டுவிட் டார்கள்!" என்றாள் லலிதா. "இந்தக் கஷ்டமெல்லாம் என்னத்திற்காக, எப்போது முடியப் போகிறது என்று தெரியவில்லை. எல்லாம் என்னுடைய துரதிருஷ்டந்தான்! நீயானால் இப்படி அம்மா அப்பாவுக்குப் பிள்ளை யாக இராமல் போய்விட்டாய்! ஊர் ஊராய் அலைந்து கொண்டிருக்கிறார். லலிதாவை எவ்வளவோ நல்ல இடம் என்று பார்த்துக் கொடுத்தேன். அவளுடைய தலையெழுத்து இப்படி இருக்கிறது!" என்று சரஸ்வதி அம்மாள் வருத்தப்பட்டுக் கொண்டு சொன்னாள். "நம்ம ராமாயணத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாமே, அம்மா! முதலிலே சூரியா அவன் காரியத்தைப் பார்க்கட்டும், எல்லாரும் வருவதற்குள்ளே!" என்றாள் லலிதா. "உன் அகத்துக்காரரின் அறையை இரண்டுநாள் நான் வைத்துக் கொள்ளலாம் அல்லவா லலிதா?" "பேஷாக வைத்துக் கொள்ளலாம்; நீயும் அவரும் எவ்வளவு சிநேகம் என்று எனக்குத் தெரியாதா? அடிக்கடி உன்னைப்பற்றி அவர் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய அறையிலே உனக்கு இல்லாத பாத்தியதை வேறுயாருக்கு?" என்றாள் லலிதா.
ரேழி அறையிலிருந்த மச்சுப்படி வழியாகச் சூரியா பெட்டி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மேலே போய்ப் பட்டாபி ராமனுடைய அறையில் ஆக்கிரமித்துக் கொண்டான். அந்த அறை வெகு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேஜை, அதன் மேலிருந்த மைக்கூடு, பேனா, புத்தக அலமாரி, கோட் ஸ்டாண்டு எல்லாம் ஒரு தூசி துப்பு இல்லாமலிருந்தன. சுவர் மூலைகளில் ஒரு ஒட்டடை கிடையாது. ஒரு பக்கச் சுவரில், சரஸ்வதி அம்மாள் சொன்னது போல் பட்டாபிராமன் படம் காணப்பட்டது. இன்னொரு பக்கச் சுவரில் மகாத்மா காந்தி படம் இருந்தது. இரண்டு படங்களும் அப்போதுதான் தொடுத்துப் போட்ட பூ மாலைகளுடன் விளங்கின. மல்லிகைப் பூவின் மணம் அறையில் கம்மென்று நிறைந்திருந்தது. பின்னோடு தன்னை அறையிலே கொண்டுவிட வந்த லலிதாவைப் பார்த்து, "என்ன லலிதா! மகாத்மா காந்தியையும் உன் அகத்துக்காரரையும் ஒன்றாக வைத்து விட்டாய் போலிருக்கிறதே! இனிமேல் உன் புருஷனையும் 'மகாத்மா பட்டாபிராமன்' என்று அழைக்க வேண்டியது தான் போலிருக்கிறது!" என்றான் சூர்யா. "மகாத்மா காந்தி உலகத்திலேயே பெரியவர்; ஆகையால் அவரைப் பூஜிக்கிறேன். உன்னுடைய சிநேகிதர் எனக்குத் தெய்வம்; ஆகையால் அவரையும் பூஜை செய்கிறேன்!" என்றாள் லலிதா. "உன்னுடைய பக்தியை ரொம்பப் பாராட்டுகிறேன், லலிதா! உன்னுடைய மாமியார் கூடக் காலமாகி விட்டாளாமே?" "அவர் கண்ணை மூடி இப்போது இரண்டு வருஷம் ஆகிறது. போன வருஷத்தில் உயிரோடிருந்து பிள்ளை ஜெயிலுக்குப் போனதைப் பார்த்திருந்தால் நெஞ்சு உடைந்து போயிருப்பார். என்னுடைய நெஞ்சு கல் நெஞ்சு, அதனால் உயிரோடிருக்கிறேன். அண்ணா! என் மாமியாரைப்பற்றி நான் புகார் கூறியதையெல்லாம் நினைத்தால் எனக்கு இப்போது வெட்கமாயிருக்கிறது.
அவரைப் போல் உத்தமி இந்த உலகத்திலேயே கிடைக்க மாட்டார். என் பேரில் அவருக்கிருந்த பிரியம் அப்புறந்தான் எனக்குத் தெரிய வந்தது. என்னைக் குற்றம் கூறியதெல்லாம் என்னுடைய நன்மைக்காகவே என்று தெரிந்து கொண்டேன். கேள், சூரியா! என் மாமியார் சாகும் போது என் கையை அவருடைய கையால் பிடித்துக் கொண்டே செத்துப் போனார். அவருடைய பிள்ளையைப் பற்றிக் கூட அவ்வளவு கவலை காட்டவில்லை." "உலகமே அப்படித்தான் இருக்கிறது, லலிதா! நாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பொல்லா தவர்களாகி விடுகிறார்கள். பொல்லாதவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள். உலகத்தின் இயல்பே மாறுதல்தானே? சீதாவின் புருஷன் சௌந்தர ராகவன் இப்படிப்பட்ட மூர்க்கனாவான் என்று யார் எதிர்பார்த்தார்கள்? உன்னுடைய அதிர்ஷ்டக்கட்டையைப் பற்றி அம்மா சொன்னாளே? பட்டாபிக்குக் கொடுக்காமல் சௌந்தர ராகவனுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும். ஐயோ! சீதா படுகிற கஷ்டத்தை நினைத்தால் எனக்கு இதயம் வெடித்து விடும் போலிருக்கிறது. "ஆம் அண்ணா! அதைப்பற்றி நீ எனக்கு விவரமாகச் சொல்ல வேண்டும். டில்லிக்குப் போன புதிதில் எவ்வளவோ உற்சாகமாகக் கடிதம் எழுதியிருந்தாள். வர வரக் கடிதம் வருவதே குறைந்து போய்விட்டது. கடைசியாக அவள் எழுதிய கடிதங்கள் ஒரே துக்கமயமாயிருக்கின்றன. குழந்தையைக் கூட மாமியாருடன் மதராஸுக்கு அனுப்பி விட்டாளாமே? எதற்காக?" "விவரமாகப் பிற்பாடு சொல்லுகிறேன்.
மொத்தத்தில் சீதாவின் வாழ்க்கை நரக வாழ்க்கையாகிவிட்டது. உன்னுடைய நிலைமை எவ்வளவோ தேவலை உன் மாமனார் எப்படி இருக்கிறார்?" "என் மாமனார் என் பேரில் காற்றும் படக்கூடாது என்கிறார். வீட்டுக்கு நான்தான் எஜமானி, இரும்புப் பெட்டிச் சாவி என்னிடந்தான் இருக்கிறது. குழந்தைக்கு நாளைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் வேண்டாம் என்று சொன்னேன். 'இவர் ஜெயிலில் இருக்கும்போது கலியாணம் எதற்கு?' என்றேன். என் மாமனார், 'அதெல்லாம் கூடாது; வீட்டுக்கு முதல் பிள்ளைக் குழந்தை; கட்டாயம் அப்த பூர்த்திக் கலியாணம் செய்ய வேண்டும்' என்று சொல்லிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் இவரும் சிறைச்சாலையிலிருந்து எழுதியிருந்தார்." "எதிர் வீட்டுக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் எப்படியிருக்கிறது; போக்கு வரவு நின்றது நின்றதுதானா?" "இது வரையில் அப்படித்தான்! ஆனால் இரண்டு நாளைக்கு முன்பு இவருடைய சிநேகிதர் அமரநாதனும் அவர் மனைவி சித்ராவும் கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறார்கள். நாளைக் காலையில் மாமனாரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவர்களைப் போய் அழைத்துவிட்டு வரலாமென்றிருக்கிறேன். எதிர் வீட்டுக்காரர்கள் வராமல் என்ன கலியாணம் வண்டிக்கிடக்கிறது?" "அப்படியே செய், லலிதா! கட்டாயம் போய் அவர்களை அழைத்துவிட்டு வா! நான் இன்று ராத்திரியே எதிர் வீட்டுக்குப் போய் வரலாம் என்றிருக்கின்றேன்.
நானும் உன் புருஷனும் அமரநாதனும் எதிர்வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து எத்தனை நாள் குஷியாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் தெரியுமா? அப்படிச் சிநேகமாயிருந்தவர்கள் திடீரென்று விரோதம் செய்து கொள்ள எப்படித்தான் முடிந்ததோ, தெரியவில்லை!" "இவருக்கு அந்த விஷயம் ஒன்றும் பிடிக்கவேயில்லை. சூரியா! எல்லாம் கிழவர்கள் செய்த வேலை. தகப்பனாரிடம் உள்ள பக்தியினாலே தான் இவர் சும்மா இருந்தார்!" இந்தச் சமயத்தில் சுண்டுப் பயல் இப்போது நன்றாய் வளர்ந்து வாலிபப்பருவத்தை அடைந் திருந்தவன் தடதடவென்று மாடிப்படி ஏறி வந்தான். "சூரியா வந்திருக்கிறானாமே எங்கே?" என்று கேட்டுக் கொண்டே இறைக்க இறைக்க ஓடி வந்தவன், சூரியாவைப்பார்த் துத்திகைத்து நின்று, "ஐயையோ! இவனா சூரியா? முகத்திலே மீசை வைத்துக் கொண்டிருக்கிறானே?" என்றான். "சுண்டு! என் மீசை உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் அதை எடுத்தெறிந்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சூரியா முகஷவரம் செய்து கொள்ள ஆரம்பித்தான். வடநாட்டு உடையை களைந்தெறிந்து விட்டு, வேஷ்டி ஜிப்பா அணிந்ததும் பழைய சூரியாவாகக் காட்சி அளித்தான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இரண்டாம் அத்தியாயம்
"ஜப்பான் வரட்டும்!"
அன்றிரவு சுமார் எட்டு மணிக்குச் சூரியா எதிர்வீட்டுக்குப் போகலாமென்று புறப்பட்டுச் சென்றபோது அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் போல் அமரநாத் நின்று கொண்டிருந்தான். "வருக! வருக! சுதந்திர வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!" என்று தமாஷ் செய்து கொண்டே சூரியாவின் கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனான் அமரநாத். கூடத்தில் போட்டிருந்த ஸோபாக்கள் ஒன்றில் உட்கார்ந்து வர்ண நூலினால் பூவேலை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண். இவர்கள் உள்ளே வந்ததும் அவள் எழுந்தாள். அமரநாத் அவளைப் பார்த்து, "சித்ரா! என் அருமை நண்பன் சூரியாவை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். சூரியா! இவள்தான் என்னை மணம் புரிந்த பாக்கியசாலி சித்ரா. பெயர் சித்ராவாக இருப்பதற்கேற்பச் சித்திரக் கலையில் மிகத் தேர்ந்தவள். அணில் போட்டால் கிட்டத்தட்ட ஆடு மாதிரி இருக்கும்!" என்று சொன்னான். சூரியா சிரித்துக்கொண்டே, "ஆடு போட்டால் எப்படி இருக்கும்?" என்று கேட்டான். சித்ரா பளிச் சென்று, "ஆடு போட்டால் அமரநாத் மாதிரி இருக்கும்" என்று கூறினாள்."பார்த்தாயா, சூரியா! இதிலிருந்து என்ன ஏற்படுகிறது? இந்த மாதரசியின் இதய கமலத்தில் எப்போதும் எழுந்தருளி யிருப்பது இந்த அமரநாத் என்று தெரிகிறதல்லவா! ஆகா! என்னைப் போன்ற பாக்கியசாலி யார்?" என்றான் அமரநாத். "குடியிருக்க வீடு கிடைப்பதுதான் இந்தக் காலத்தில் கஷ்டமாயிருக்கிறதே! ஒருவருடைய இதய கமலத்தில் இன்னொ ருவர் குடியிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும்!" என்றாள் சித்ரா.
இந்தத் தம்பதிகளின் அன்யோன்ய உல்லாசப் பேச்சைக் கேட்ட சூரியா, 'புருஷன் மனைவி என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்?' என்று எண்ணிக் கொண்டான். வெளிப்படையாக, "அமரநாத்! உங்கள் மனைவியைப் பற்றி லலிதா வர்ணித்திருந்ததெல்லாம் சரிதான்!" என்று சொன்னான். "லலிதா என்பது யார்?" என்று சித்ரா ஒரு கேள்வி போட்டாள். "இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு எதிர் வீட்டில் இருக்கும் என்னுடைய சகோதரி லலிதாவைத் தான் சொல்கிறேன்.""ஓகோ! எங்கள் சத்துரு வீட்டு நாட்டுப் பெண்ணையா? நான் அவளைப்பார்த்து எத்தனையோ வருஷம் ஆயிற்றே! என்னைப்பற்றி அவள் என்ன வர்ணித்திருக்க முடியும்?" என்று கேட்டாள் சித்ரா. "முன்னே எழுதியிருந்ததைத்தான் சொல்கிறேன் அவளும் தாங்களும் ரொம்ப சிநேகிதம் என்று எழுதியிருந்தாள்." "சிநேகமும் இல்லை, ஒன்றுமில்லை; நாங்கள் ஜன்ம விரோதிகள் அல்லவா?" இதற்குள் அமரநாத், "சூரியா! முனிசிபல் எலெக்ஷன் விஷயமாக இந்த இரண்டு வீட்டுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டதல்லவா? அது விஷயத்தில் இவளுக்கு ரொம்பக் கோபம், அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுகிறாள்!" "எனக்குக் கோபம் ஒன்றுமில்லை, மனிதர்கள் இப்படி மூடர்களாயிருக்கிறார்களே என்று பரிதாபந்தான். மொத்தத்தில் நமது தமிழ் நாட்டு ஜனங்கள் வாழத் தெரியாதவர்கள்.வாழும் வகை தெரிய வேண்டுமானால் கல்கத்தாவுக்குப் போய் வங்காளிகளுக்கு மத்தியில் இரண்டு வருஷமாவது இருந்துவிட்டு வரவேண்டும்!" என்றாள் சித்ரா. "நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன். தமிழ்நாட்டார் மற்றவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்க முடியும்?" என்றான் சூரியா.
"இதைக் கேள், சூரியா! எலெக்ஷன் சண்டைக்குப் பிறகு இவளை இங்கே வைத்துக் கொண்டு காலட்சேபம் செய்ய முடியாது என்று தான் முக்கியமாக நான் கல்கத்தாவுக்குப் போனேன். போன பிறகு, ஏண்டாப்பா போனோம் என்று இருக்கிறது. இவளுக்கு வங்காளி நாகரிகத்தில் அத்தனை மோகம் பிறந்துவிட்டது. அதுவும் நேதாஜி சுபாஷ் மலாய் நாட்டில் சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறார் என்று தெரிந்த பிறகு இவளுக்கு ஒன்றுமே தலைகால் புரியவில்லை. ஆகாச விமானம் ஒன்று கிடைத்தால் என்னை இவள் பரிதவிக்கவிட்டு நேதாஜி போஸிடம் பறந்து போய்விடுவாள்!" என்றான் அமரநாத். இந்தச் சமயத்தில் வாசலில் ஆள்வரும் சத்தம் கேட்கவே, சித்ரா, "மாமனார் வருகிறார் போலி ருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே எழுந்து, மச்சுப்படி ஏறத் தொடங்கினாள். "நாளை ஆண்டு நிறைவுக்கு உங்களை வந்து லலிதா அழைப்பாள்! அவசியம் வரவேண்டும்" என்றான் சூரியா. தாமோதரம்பிள்ளை உள்ளே வந்ததும், இளைஞர்கள் இருவரும் எழுந்து நின்றார்கள். "அப்பா! யார் பார்த்தீர்களா? அடையாளம் தெரிகிறதா?" என்று அமரநாத் கேட்டான். "ஓகோ! நம்ம சூரியா போலிருக்கிறதே! ஒருவேளை தவறாகச் சொல்கிறேனோ? கண் அவ்வளவு துல்லியமாக இல்லை; வயதாகி விட்டதல்லவா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "சூரியாதான், அப்பா! சூரியாவே தான்!" என்றான் அமரநாத். "நமஸ்காரம்" என்றான் சூரியா. தாமோதரம்பிள்ளை அவருடைய ஆபீஸ் அறைக்குப் போய் விடுவார் என்று அமரநாத் நினைத்ததற்கு மாறாக அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார். வாலிபர்கள் இருவரும் உட்கார்ந்த பிறகு சூரியாவை அவர் மறுபடியும் உற்றுப் பார்த்தார். "ஆமாம், சூரியாதான்! என்ன ஓய்! சூரியநாராயண ஐயரே! நீர் எங்கேயோ ஆப்கானிஸ்தானத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள்; மாஸ்கோவில் பார்த்ததாகச் சொன்னார்கள்; அப்புறம் ஸைகானுக்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள்; கடைசியில் நம்ம ஊரிலே இருக்கிறீரே? இந்தியாவின் சுதந்திரம் எந்த மட்டில் இருக்கிறது? எங்கே கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறீர்?" என்றார்.
"மாமா! என்னைப்பற்றி இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்துக் கொண்டு, எந்த நாட்டுக்குப் போயிருக்கிறேன் என்றெல்லாம் விசாரித்து வைத்திருக்கிறீர்களே? அதற்காகச் சந்தோஷம், ஆனால் நான் எந்த அயல் நாட்டுக்கும் போகவில்லை. இந்தியாவின் சுதந்திரம் இந்தியாவிலே தான் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆப்கானிஸ்தானத்துக்கு ஏன் போக வேண்டும்?" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லாதேயும், ஓய் சூரியநாராயண ஐயரே. நேதாஜி போஸ் மலாய் நாட்டில்தானே சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறாராம்? அப்புறம், ஜயப்பிரகாச நாராயணன் நேபாளத்திலோ திபெத்திலோ இந்தியாவின் சுதந்திரத்தை ஸ்தாபித் திருப்பதாகச் சொல்கிறார்கள்! அதெல்லாம் பொய்யா?" "உண்மையில் இந்தியாவின் சுதந்திரம் ஆமத்நகர் சிறைச்சாலையில் காந்தி மகாத்மா, நேருஜி முதலிய தலைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது!" என்றான் அமரநாத். "சூரியநாராயண ஐயரே! அமரநாத் சொல்வதை நீர் ஒத்துக் கொள்கிறீரா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "மாமா! என்னைச் சூரியா என்று அழைத்தால்தான் இனிமேல் பதில் சொல்வேன். "சரி அப்பா, சூரியா! இப்போது சொல்லு! இந்தியாவுக்குச் சுதந்திரம் எந்த வழி மூலமாக வரப் போகிறதென்று நினைக்கிறாய்?" என்று தாமோதரம்பிள்ளை கேட்டார். "சொல்ல முடியாது மாமா! எந்த வழியினாலும் வரும்; எல்லா வழியி னாலும் வரும். ஆனால் வரும்போது அதைக் கைப்பற்ற ஜனங்கள் தயாராயிருக்க வேண்டும். இதற்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்வது தான் இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை..."
"சுதந்திரத்துக்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்கிறதா? சூரியா! அது ஒருநாளும் முடியாத காரியம். நம்முடைய ஜனங்களைச் சுதந்திரத்துக்குத் தயார் செய்ய வேண்டுமானால் அதற்கு வழி என்ன தெரியுமா? ஜப்பான்காரன் படையெடுத்து வந்து இந்தியாவைப் பிடித்து ஒரு பத்து வருஷமாவது ஆட்சி நடத்த வேண்டும். நம்ம ஜனங்களுக்கு ஜப்பான்காரன் தான் சரி. அவன் உச்சிக்குடுமிகளையெல்லாம் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிச் சாதி வித்தியாசம், மத வித்தியாசம் எல்லாவற்றையும் அடியோடு ஒழிக்க வேண்டும். அரிசியும் பருப்பும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் சவுக்கினால் நாலு அடி அடித்து மாமிசமும் மீனும் சாப்பிடச் செய்ய வேண்டும். பத்து வருஷம் இப்படி ஜப்பானிய ஆட்சியிலே இருந்தால் இந்தியா சுதந்திரத்துக்கு லாயக்காகும்! என்ன சொல்கிறாய், சூரியா!" "நான் அதை ஒப்பவில்லை; ஜப்பான் ஆட்சியில் பத்து வருஷம் இருந்தால் அதற்குப் பிறகு இன்னும் 140 வருஷம் ஜப்பான் ஆட்சியிலே இருக்க நேரிடும். ஆனால் ஜப்பானியர்கள் அவ்வளவு மூடர்கள் என நான் நினைக்கவில்லை. இந்தியாவைத் தாங்கள் ஜயிப்பதற்குப் பதிலாக, நேதாஜி சுபாஷ்போஸுக்கு உதவி செய்து அவரைக் கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டவே பார்ப்பார்கள். இந்தியாவை ஜயித்து ஆள்வதைக் காட்டிலும் இந்தியாவைச் சிநேகமாக வைத்துக் கொள்வதுதான் ஜப்பானுக்கு அனுகூலம்." "ஜப்பானுக்கு எது அனுகூலம் என்று உமக்குத் தெரிந்திருக்கிறது, ஓய்! அது ஜப்பானுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?
நாய் குரைத்ததைப் பார்த்து ஒருவன் பயப்பட்டானாம். 'குரைக்கிற நாய் கடிக்காது' என்கிற பழமொழி தெரியாதா? என்று இன்னொருவன் சொன்னானாம். 'பழமொழி எனக்குத் தெரியும்; ஆனால், அந்த நாய்க்குத் தெரிந்திருக்க வேண்டுமே!' என்றானாம் பயந்த பேர்வழி. அந்த மாதிரி, நேதாஜிக்கு உதவி செய்வதின் அனுகூலத்தை ஜப்பான் உணர்ந்திருக்க வேண்டுமே?" "நேதாஜி படையில் இதுவரை ஐம்பதினாயிரம் வீரர்கள் சேர்ந்திருக்கிறார்களாம். ஜப்பான்தான் ஆயுதம் கொடுத்து உதவியிருக்கிறதாம்!" என்றார் அமரநாத். ஐம்பதினாயிரம் வீரர்கள் என்றால் அவ்வளவு அதிகமா? அவர்களைக் கொண்டு இந்தியா தேசத்தையே பிடித்துவிட முடியுமா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "நேதாஜி ஐம்பதினாயிரம் பேரோடு வந்தால் இந்தியாவில் அவருடன் சேர்வதற்கு ஐம்பது லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்!" என்றான் சூரியா. "வங்காளத்தில் மட்டுமே ஐம்பது லட்சம் பேர் சேர்வார்கள். கல்கத்தாவெல்லாம் ஓயாமல் இதைப்பற்றியே பேச்சாக இருக்கிறது" என்றான் அமரநாத். "ஐம்பது லட்சம் பேர் சேரட்டும்; ஐந்து கோடிப் பேர் வேணுமானாலும் சேரட்டும். நேதாஜி புது டில்லிக்கு வந்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளட்டும், நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடுகிற காரியம் மட்டும் உதவாது. நேதாஜி எப்போதோ வரப்போகிறார் என்பதற்காக இப்போது இங்கே சில தறிதலைகள் 'ஸாபொடாஜ்' வேலையில் இறங்குகிறார்களே, அது சுத்த முட்டாள்தனம்.
ஜப்பான் வருகிறவரையில் காத்திருப்பது தானே! அதற்குள்ளே ரயிலைக் கவிழ்க்கிறேன், பாலத்தை உடைக்கிறேன் என்று ஆரம்பிக் கிறார்களே! 'ஸாபொடாஜ்' வேலைகள் அரசாங்கத் துரோகம் மட்டுமல்ல, பொது ஜனத் துரோகம். நான் ஜட்ஜாயிருந்தால் அப்படிப்பட்ட காரியம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிப்பேன். "இவ்விதம் தாமோதரம்பிள்ளை சொல்லி வந்த போது சூரியாவின் முகத்தில் ஒரு மாறுதல் காணப் பட்டது. மலர்ந்திருந்த அவன் முகம் சட்டென்று சுருங்கிற்று. இந்த மாறுதலை அமரநாத் கவனித்தான். அமரநாத் கவனித்தான் என்பதைச் சூரியாவும் தெரிந்து கொண்டான். தெரிந்து கொண்டதும் அமரநாத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். சூரியாவின் கண்கள் ஏதோஒரு உறுதியை அமரநாத்தினிடம் எதிர்பார்த்ததாகத் தோன்றியது. அமரநாத்தின் கண்கள் அந்த உறுதியைச் சூரியாவுக்கு அளித்தன.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
மூன்றாம் அத்தியாயம்
ஆண்டு நிறைவில் அடிதடி
சிரஞ்சீவி பாலசுப்பிரமணியன் ஆண்டு நிறைவுக் கலியாணம் மேளதாளத்துடன் சிறப்பாக ஆரம்பமாயிற்று. கலியாண வீட்டில் எல்லாரும் வெகு உற்சாகமாக இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் சூரியாவின் எதிர்பாராத வருகைதான். நெடுநாளாகப் பாராத பிள்ளையைப் பார்த்துக் கிட்டாவய்யரும், அவருடைய மனைவியும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். லலிதாவின் குதூகலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. தன்கணவன் சிறைச்சாலையில் இருப்பதைக் கூட அவள் அன்றைக்கு மறந்து கலியாண ஏற்பாடுகளில் உல்லாசமாக ஈடுபட்டு ஓடியாடிக் கொண்டிருந்தாள். லலிதாவின் மாமனார் ஆத்மநாதய்யருக்கு, சூரியாவின் வருகை காரணமாக எதிர் வீட்டுத் தாமோதரம்பிள்ளையுடன் மறுபடியும் பேச்சுவார்த்தை தொடங்கியது பற்றி மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று. சூரியாவுக்கும் அன்றைக்கு என்றுமில்லாத உற்சாகம் ஏற்பட்டிருந்தது. அப்பா அம்மா முதலியவர்கள் தன்னை எப்படி வரவேற்பார்களோ என்று அவன் மனத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகம் நீங்கிற்று. அமரநாதன் தன்னுடைய சிநேகத்தை மறந்து விடவில்லை என்பதும் அவனுடைய தகப்பனார் தாமோதரம்பிள்ளை கூடத் தன்னுடன் சல்லாபமாகப் பேசியதும் அவனுடைய உற்சாகம் வளரக் காரணமாயிருந்தன. இது மட்டுமா, அவனுடன் பெருஞ்சண்டை போட்ட தமையன் கங்காதரன் இன்று அன்பாகப் பேசினான். "சூரியா! அப்பாவுக்கு வயதாகிவிட்டது அவரால் பண்ணைக் காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. நானும் என் வேலையைவிட்டு கிராமத்துக்குப் போய்இருப்பது முடியாத காரியம். நீதான் ராஜம்பேட்டைக்குப்போய் அப்பாவுக்கு ஒத்தாசையாயிருக்க வேண்டும்.
குடியானவர்கள் விஷயத்தில் உன் இஷ்டம் போல் எப்படி வேணுமானாலும் செய்துகொள்; நான் ஆட்சேபிக்கவில்லை. ஐந்து வருஷம் அலைந்தது போதும், பேசாமல் ஊருக்கு வந்துவிடு!" என்று கங்காதரன் கூறியது சூரியாவுக்கு மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. எல்லோரும் தன்னிடம் இவ்வளவு அன்பாக இருப்பது ஏன் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டான். எல்லாரும், "சூரியா! சூரியா!" என்று அவனைப் பிரமாதப்படுத்துவதைப் பார்த்துவிட்டு லலிதாவின் சீமந்த புத்திரி பட்டுவும் அவனுடன் அதி விரைவில் சிநேகமாகி விட்டாள். சூரியாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு வேறு யார் அழைத்தாலும் வரமாட்டேன் என்று அந்தக் குழந்தை பிடிவாதம் பிடித்தது. இதனாலெல்லாம் சூரியா வெகு நாளாக அறியாத உற்சாகத்துடன் இருந்த சமயத்தில் காலை சுமார் எட்டு மணிக்கு, வாசலில் தபால்காரன் வந்தான். தபால்கார னுடைய குரல் சூரியாவுக்கு ஏற்கனவே கேட்ட குரலாகத் தொனித்தது. உடனே லலிதா, "தெரியுமா, அண்ணா உனக்கு? தபால்கார பாலகிருஷ்ணன் இப்போது இந்த ஊருக்கு மாற்றலாகி வந்துவிட்டான். இந்த வீதிக்கு அவன் தான் இப்போது தபால் கொண்டு வந்து கொடுக்கிறான்!" என்றாள். அவள் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே, "இந்த வீட்டிலே கே.எஸ். நாராயணன் என்று யாராவது வந்திருக்கிறார்களா?" என்று பாலகிருஷ்ணன் கேட்டது சூரியாவின் காதில் விழுந்தது.
உடனே சூரியா வீட்டுக்கு வெளியே சென்று "என்ன, பாலகிருஷ்ணா! சௌக்கியமா? என்னை நினைவு இருக்கிறதா?" என்று கேட்டான். "ஓகோ! நீங்கள்தானா ஸார்? அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். என்ன சேதி! என்ன சமாசாரம்? எப்போது வந்தீர்கள்? இந்தக் கடிதம் உங்களுக்குத்தானா பார்த்துச் சொல்லுங்கள்!" என்று ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். விலாசம் தாரிணியின் கையெழுத்தில் இருப்பதைக் கண்டு சூரியா ஆவலுடன் அதை வாங்கி, "ஆமாம், எனக்குத் தான்!" என்றான். "ஓகோ! கே.சூரிய நாராயணய்யர் என்ற பெயரை கே.எஸ். நாராயணன் என்று சுருக்கிக் கொண்டீர்களாக்கும்! நினைத்தேன்; நினைத்தேன். லலிதா அம்மாளுக்குக் கூட ஒரு கடிதம் இருக்கிறது, அதையும் நீங்களே..." என்று சொல்வதற்குள், லலிதா அங்கு வந்து சேர்ந்தாள். "இந்தாங்க அம்மா உங்களுக்கு ஒரு கடிதம். குழந்தைக்கு இன்றைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் போலிருக்கிறது. ராஜம் பேட்டையிலே நடந்த கலியாணம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது!" என்று சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் லலிதாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். பிறகு சூரியாவைப் பார்த்து, "ஸார்! மதகடியில் நாம் சண்டை போட்டோ மே ஞாபகம் இருக்கிறதா? கடிதத்தை நான் பிரித்துப் பார்த்துவிட்டேன் என்று கோபித்துக் கொண்டீர்களே?" என்றான். "அதைப்பற்றி இப்போது என்ன? எந்தக் காலமோ நடந்தது!" என்று சொன்னான் சூரியா. "அதற்காகச் சொல்லவில்லை; இப்போது உங்களிடம் கொடுத்தேனே, அந்தக் கடிதத்தை நான் பிரித்துப் பார்க்கவில்லை என்பதற்காகத் தான் சொன்னேன் தெரிகிறதா?"
சூரியா உடனே சந்தேகத்துடன் தன் கையிலிருந்த கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பி உற்றுப் பார்த்தான். பால கிருஷ்ணன் புன்னகையுடன், "என்ன, ஸார்! பிரித்துப் பார்த்திருக்கிறதா!" என்று கேட்டான். "இல்லை" என்றான் சூரியா. "அதற்காகத் தான் சொன்னேன்; ஒருவேளை பிரித்துப் பார்த்திருந்தாலும் பிரித்தது நான் இல்லை. பழைய ஞாபகத்தை வைத்துக்கொண்டு என் பேரில் சந்தேகப்படாதீர்கள்; தெரிகிறதா? லலிதா அம்மா! உங்கள் கடிதத்தையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. மிஸ்டர் சூரியா பெரிய சந்தேகப்பிராணி ஆயிற்றே! அவர் என் பேரில் சந்தேகப்படக் கூடாது! நான் போய் வரட்டுமா?" "போஸ்டுமேன்! மத்தியானம் இங்கே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாமே?" என்றாள் லலிதா. "அந்தக் காலம் மலையேறிப் போச்சு; இப்போ எனக்கும் குடும்ப பாரம் சுமந்திருக்கிறது. மத்தியானம் வீட்டுக்குச் சாப்பிடப் போகாவிட்டால் நல்ல டோ ஸ் கிடைக்கும். சாப்பாடு கிடக்கிறது அம்மா! மனது நல்ல மனதாயிருக்க வேண்டும் அவ்வளவுதான். மிஸ்டர் சூரியா! உங்கள் கடிதத்தை நான் பிரித்துப் பார்த்ததாக எண்ணிக் கொள்ள வேண்டாம், தெரிகிறதா? என்ன லலிதா அம்மா, நான் சொல்கிறது என்ன?" என்று சொல்லிக் கொண்டே பாலகிருஷ்ணன் நடையைக் கட்டினான். அவன் கொஞ்ச தூரம் போனதும் சூரியா லலிதாவைப் பார்த்து, "பாலகிருஷ்ணனுடைய கிறுக்கு முன்னைவிட அதிகம் போலிருக்கிறதே? இப்படி உளறுகிறானே?" என்றான்.
"அவன் ஒன்றும் உளறவில்லை, அண்ணா! அவனுக்குக் கிறுக்கும் இல்லை. பாலகிருஷ்ணன் சொன்னதில் அர்த்தம் உனக்குப் புரியவில்லையா?" "அவன் சொன்னதில் அர்த்தம் வேறே இருக்கிறதா?" என்று கேட்டான் சூரியா. "ஏன் இல்லை? உனக்கு இது தெரியாதது ஆச்சரியமாயிருக்கிறது. வடக்கேயெல்லாம் ஒருவேளை இந்த வழக்கம் கிடையாதோ என்னமோ? இவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து எனக்கு வரும் கடிதங்களையெல்லாம் பிரித்துப் பார்த்துவிட்டுத் தான் அனுப்புகிறார்கள்; இதற்கு 'சென்ஸாரிங்' என்று பெயராம்..." சூரியாவுக்கு 'சுருக்' என்றது, மறுபடியும் கடிதத்தை முன் பின் திருப்பிப் பார்த்துவிட்டுத் தைரியமாக, "எனக்கு வந்திருக்கும் கடிதத்தை யாரும் பிரித்துப் பார்க்கவில்லை" என்றான். "உனக்கு எப்படித் தெரியும், பிரித்துப் பார்க்கவில்லை என்று? சில கடிதங்களைப் பகிரங்கமாகப் பிரித்துப் பார்த்து மேலே 'சென்ஸார் செய்யப்பட்டது' என்று சீட்டை ஒட்டி விடுவார்களாம். இன்னும் சில கடிதங்களைப் பிரித்து தெரியாதபடி திருப்பி ஒட்டிவிடுவார்களாம். எனக்கு இரண்டு விதமாகவும் வருவதுண்டு." "உன் அகத்துக்காரர் சிறையிலிருந்து உனக்கு எழுதும் கடிதங்களை அப்படியெல்லாம் பிரித்துப் பார்த்து அனுப்பலாம். ஆனால், நான் இன்றைக்கு வந்தவன்தானே? என் கடிதத்தை எதற்காகப் பிரிக்கிறார்கள்?" "அப்படியில்லை, அண்ணா, இந்த வீட்டு மேல் விலாசம் இருப்பதால் ஒருவேளை பிரித்துப் பார்த்திருப்பார்கள். நீயும் அப்படி இலேசுபட்டவன் அல்லவே? என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறாய் அல்லவா? நமக்குப் பார்த்தால் உறை பிரிக்கப்பட்டதாகவே தெரியாது. ஆனால் பாலகிருஷ்ணனுக்குப் பார்த்தவுடனே தெரிந்து போய்விடும். அவன் சொன்னதிலிருந்து நம் இரண்டு பேருக்கும் வந்த கடிதங்களைப் பிரித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் கடிதத்தைப் படித்துப் பார்க்கலாம்!"
இவ்விதம் சொல்லிக் கொண்டே லலிதா உறையைப் பிரித்தாள். உள்ளேயிருந்த கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய முகம் மலர்ந்தது. "இவர் தான் ஜெயிலிலிருந்து எழுதியிருக்கிறார்! குழந்தையின் ஆண்டு நிறைவு அன்றைக்குச் சரியாக வந்து சேரும்படியாக எழுதியிருக்கிறார்.அவர் மட்டும் இங்கே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? நீ வந்ததற்காக எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?" என்றாள் லலிதா. இதற்குள் உள்ளேயிருந்து அம்மா கூப்பிடும் குரல் கேட்கவே லலிதா வீட்டுக்குள் சென்றாள். சூரியாவும் தனக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். பிரிக்கும்போதே அவன் மனதிலிருந்த கலக்கம் அகன்றுவிட்டது கடிதம் எழுதியிருப்பது தாரிணி. ஸி.ஐ.டி. போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய எந்த விஷயமும் அவள் எழுதியிருக்கமாட்டாள். புரட்சிக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதும்போது மனிதர்களின் உண்மைப் பெயர்களைக் கூடக் குறிப்பிடுவதில்லை, எல்லோருக்கும் மாறு பெயர்கள் இருந்தன. தாரிணிக்குச் 'சரித்திரம்' என்று பெயர் சூரியாவுக்கு 'தூதன்' என்று பெயர். இப்படி யெல்லாம் முன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது ஸி.ஐ.டி. பிரித்துப் பார்த்து என்ன தெரிந்து கொள்ள முடியும்? சூரியா எண்ணியது போலவே தாரிணியின் கடிதத்தில் போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் வேறுவிதக் கவலை சூரியாவுக்குத் தரக்கூடிய விஷயம் இருந்தது. தாரிணி வெகு சுருக்கமாகச் சில வரிகள் தான் எழுதியிருந்தாள். "அத்தங்காளின் நிலைமை முன்னைவிட மோசமா யிருக்கிறது. உடம்பு, மனது ஒன்றும் சரியாயில்லை; உங்களைச் சந்திக்க விரும்புகிறாள். கூடிய சீக்கிரம் வந்து சேரவும், நீங்கள் உடனே வந்து சேராவிட்டால் ஏதாவது விபரீதமாக முடியலாம். - சரித்திரம்."
இந்தக் கடிதம் சூரியாவை ரொம்பவும் கலக்கிவிட்டது. தென்னாட்டுக்கு எந்த வேலையை முன்னிட்டு வந்தானோ அது பூர்த்தியாகி விட்டதாகச் சொல்வதற்கில்லை. ஆயினும் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பிப் போக வேண்டியது தான். ஆகா! இது என்ன தொல்லை! நல்ல அத்தங்காள் வந்து சேர்ந்தாள், தன்னுடைய வேலையையெல்லாம் கெடுப்பதற்கு! அந்த மூர்க்கன், அவளுடைய கணவன், இப்படியும் ஒரு மனிதன் உண்டா? சீதாவின் வாழ்க்கை எப்படி முடியப் போகிறதோ, தெரியவில்லையே? ஆண்டு நிறைவுக் கலியாணத்துக்காக வைதிகப் பிராமணர்களும் பந்துமித்திரர்களும் வரத் தொடங் கினார்கள். சூரியாவும் வீட்டுக்குள்ளே சென்றான், வைதிககாரியங்கள் ஆரம்பமாயின. வைதிகர்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள். ஸ்திரீகள் 'கௌரீ கலியாணம்' பாடினார்கள். நாதஸ்வர கோஷ்டியர் ஜாம்ஜாம் என்று முழங்கினார்கள். சூரியாவும் சற்று நேரத்தில் மேற்படி வைபவங்களில் முழுதும் மனதை ஈடுபடுத்தினான். தான் வந்த காரியத்தையும் புது டில்லி அத்தங்காளின் கஷ்டத்தையும் மறந்து விட்டான் என்றே சொல்லலாம். காலை மணி 10-30 ஆயிற்று; தாமோதரம்பிள்ளை தம்முடைய ஆபீஸ் அறையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். டெலிபோன் மணி அடித்தது; ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு பேசினார். "ஹலோ! தாமோதரம்பிள்ளை பேசுகிறது, போலீஸ் ஸ்டேஷனா? என்ன விசேஷம் - எதிர் வீட்டிலா? - ஓகோ? - நான் எதிர்வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கிறது கூடக் கிடையாதே... உங்களுக்குத் தான் நன்றாய்த் தெரியுமே?..இல்லை, நான் பார்க்கவில்லை. தெரியாது, ஒன்றுமே தெரியாது!... வாருங்கோ! வாருங்கோ! பேஷாய் வாருங்கோ! எல்லாத் தமாஷையும் என் வீட்டிலிருந்தே பார்க்கிறேன்!"
டெலிபோன் ரிஸீவரை வைத்த பிறகு தாமோதரம்பிள்ளை மேலே நோக்கியவண்ணம் இரண்டு நிமிஷம் யோசித்துக் கொண்டிருந்தார்; பிறகு, "அமரநாத்!" என்று அழைத்தார். அமரநாத் அறைக்குள்ளே வந்தான். "எங்கேயோ புறப்படுகிறாப்போல் இருக்கே?" என்றார். "ஆம், அப்பா! நானும் சித்ராவும் எதிர்வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் போகலாமல்லவா!" "அவசியம் போகலாம், அமர்நாத்! நீ எதிர் வீட்டுக் கலியாணத்துக்குப் போவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை ஆனால் ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்." "என்னத்தை யோசிக்கறது! நானும் சித்ராவும் கட்டாயம் போகத் தான் போகிறோம். நியாயமாய்ப் பார்த்தால் நீங்கள் கூட வரலாம். எத்தனை நாளைக்கு மனதிலே துவேஷத்தை வளர விட்டுக் கொண்டிருக்கிறது!" "கூடாது, கூடாது! துவேஷத்தை வளரவிடவே கூடாது. உண்மையில் நான் கூடக் கலியாணத்திற்கு வருவதாகத் தான் இருந்தேன் அதற்குள் ஒரு தடை குறுக்கிட்டிருக்கிறது..?" "அது என்ன தடை, அப்பா?" "உன் சிநேகிதன் சூரியாவைப் பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்கு ஏதோ தகவல் வந்திருப்பது போலத் தோன்றுகிறது...?" "என்ன? என்ன?" என்று திடுக்கிட்டுக் கேட்டான் அமர்நாத். "ஆமாம்; சூரியாவைப்பற்றி ஏதோ சி.ஐ.டி. தகவல் வந்திருக்கும் போலிருக்கிறது. இப்போது டெலிபோனில் டி.எஸ்.பி. என்னைக் கேட்டார். 'சூரியா என்கிற பையன் எதிர் வீட்டுக்கு வந்திருக்கிறது தெரியுமா' என்று கேட்டார்..?" "நீங்கள் என்ன சொன்னீர்கள்?"
"எனக்கும் எதிர் வீட்டுக்கும் தான் ஜன்ம விரோதமாயிற்றே?" என்றேன். 'வீட்டு வாசலில் ஒரு புதிய இளைஞனைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டார். அங்க அடையாளம் கூடச் சொன்னார். 'தெருவிலே நின்று வருகிறவர் போவோரையெல்லாம் பார்ப்பது தான் எனக்கு வேலையா?" என்று நான் பதிலுக்குக் கேட்டேன்." "அப்புறம்" "அப்புறம் என்ன? சீக்கிரத்தில் போலீஸார் இங்கே வரப் போகிறார்கள்? எதிர் வீட்டில் அமளி துமளிப்படும். இந்த நிலைமையில் நான் எப்படி எதிர் வீட்டுக்குப் போவது? என்னை அங்கே பார்த்தால் டி.எஸ்.பி.யிடம் சொன்னது பொய் என்று ஏற்பட்டுவிடும் அல்லவா!" "அப்பா! இப்போது என்ன செய்யலாம்? சூரியாவுக்கு ஓர் எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா?" "அது உன் இஷ்டம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்; அப்புறம் உன் உசிதம் போலச் செய். ஒரு விஷயம், எச்சரிக்கை செய்வதாயிருந்தால் உடனே செய்ய வேண்டும். இன்னும் பதினைந்து நிமிஷத்தில் போலீஸ் படை இங்கே வந்து விடும். சூரியாவை அரஸ்டு செய்து கொண்டு போனால், அவன் அறியாத உண்மைகளையெல்லாம் சொல்லும்படி செய்வார்கள்... நம்ஊர்ப் போலீஸ்காரர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று நீ கனவிலே கூட எண்ணியிருக்க முடியாது; தெரிகிறதா?"
"அப்பா! நீங்கள் சொல்லும்போதே எனக்கு மயிர்க்கூச்சல் உண்டாகிறது. ஆனால் சூரியாவுக்கு இப்போது வெறுமனே எச்சரிக்கை செய்து என்ன பிரயோசனம்? இன்னும் பதினைந்து நிமிஷத்திலே போலீசார் வந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள். அதற்குள் அவன் எப்படித் தப்பிக்க முடியும்? எங்கே போய் ஒளிந்து கொள்வான்!" "இதையெல்லாம் என்னைக் கேட்டு என்ன பயன்? நீயும் உன்னுடைய சிநேகிதனும் எப்படியாவது போங்கள். திடீரென்று அவன் எங்கே போய் ஒளிந்து கொள்வான்? அக்கம் பக்கத்தில் யாராவது உதவி செய்தால் தான் தப்பித்துக் கொள்ளலாம்." "அப்பா! மன்னித்துக் கொள்ளுங்கள்; சூரியாவுக்கு இந்த வீட்டில் அடைக்கலம் கொடுக்கலாமா?" "மறுபடி என்னைக் கேட்கிறாயே? இந்த வீட்டில் எனக்கு எவ்வளவு பாத்தியதை உண்டோ , அவ்வளவு உனக்கும் உண்டு; உன்னிஷ்டம் போல் செய். மேலே மாடியில் பின்கட்டு அறையில் போட்டுப் பூட்டிச் சாவியை வேணுமானாலும் காணாமல் அடித்துவிடு! ஆனால் உன் இஷ்டம் என்னை இந்த விஷயமாக ஒன்றுமே கேட்க வேண்டாம்! தெரிந்ததா!" மறு நிமிடம் அமரநாத் வெளியேறி எதிர் வீட்டுக்குச் சென்றான். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் சூரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினான். மேல் மச்சுக்கு அழைத்துப் போய்த் தகப்பனார் சொற்படி பின்கட்டு அறையில் அடைத்துக் கதவைப் பூட்டினான்.
சில நிமிஷத்துக்கெல்லாம் வீதியில் தட தட தட தட என்று மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. மோட்டார் சைக்கிளுடன் ஜீப் ஒன்றும் வந்தது. வீதியின் இரு புறத்திலிருந்தும் போலீஸார் மார்ச் செய்து கொண்டு வந்தார்கள். கைதிகளைப் போட்டு அடைத்துக் கொண்டு போகும் இரும்புக் கூண்டு போட்ட போலீஸ் வண்டி ஒன்றும் வந்தது. ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலிலும் கொல்லையிலும் போலீஸ் ஜவான்கள் நின்று கொண்டார்கள். அப்புறம் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. வைதிகப் பிராமணர்கள் மந்திரம் சொல்வதை நிறுத்திவிட்டு வெளியில் ஓடிவந்தார்கள். அவர்களையெல்லாம் குண்டாந்தடியால் அடித்துப் போலீஸார் வீட்டுக்குள்ளே விரட்டினார்கள். "யாரையும் வெளியில் விட வேண்டாம்" என்று ஒரு பெரும் அதிகாரக் குரல் உத்தரவிட்டது. ரேழியில் உட்கார்ந்திருந்த நாதஸ்வரக்காரர்கள் வெளியேறப் பார்த்தார்கள். அதன் பயனாகத் தவுல் வாத்தியம் இரண்டு பக்கமும் படார் என்று கிழிந்தது. நாதஸ்வரக் குழாயும் ஒத்து வாத்தியமும் நொறுங்கின. ஜாலராத் தாளங்கள் சுக்குநூறாயின. போலீஸ் உத்தியோகஸ்தர்கள் வீட்டுக்குள்ளே பிரவேசிக்கப் பார்த்தபோது கிட்டாவய்யர் வந்து வாசற்படியில் நின்றார். தன்னுடைய பிள்ளையைப் பிடிக்கத் தான் வந்திருக்கிறார்கள் என்று ஒருவாறு தெரிந்து கொண்டார் போலும். பையன் வெளியேறி விட்டான் என்பது அவருக்குத் தெரியாது. ஆகையால் கையைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்று, "உள்ளே வைதிக காரியம் நடக்கிறது; ஒருவரும் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் என் செத்த உடம்பை மிதித்துக் கொண்டு தான் போகவேண்டும்" என்றார். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் மண்டையில் ஒரு அடி, கழுத்தில் ஒரு கல்தா.
ஆத்மநாதய்யர் முன் வந்து, "ஏன், ஸார், இவ்வளவு தடபுடல் செய்கிறீர்கள்? சாவதானமாகப் பரிசோதனை செய்து யார் வேண்டுமோ அவரைக் கொண்டு போங்கள் யாரும் தடுக்கவில்லை. வீணாகப் பெண் பிள்ளைகளைப் பயப்படுத்த வேண்டாம்" என்றார். ஆத்மநாதய்யருடைய சாந்தமான பேச்சின் பயனாக அவருக்கு மண்டையில் இரண்டு அடி கிடைத்தது. அவ்வளவு தான்; போலீஸார் தடதட என்று வீட்டுக்குள்ளே பிரவேசித்தார்கள். முன்கட்டிலும் பின்கட்டிலும் மேல் மாடியிலும் ஒவ்வொரு அறையாகப் புகுந்து தேடினார்கள். காலில் தட்டுப்பட்டதை எல்லாம் உதைத்துத் தள்ளினார்கள். கையில் அகப்பட்டதை எல்லாம் உடைத்து நொறுக்கினார்கள். எதிரில் தட்டுப்பட்டவர்களைப் பிடித்துத் தள்ளினார்கள்; அல்லது தடியால் அடித்தார்கள். படுக்கையறைக்குள்ளே புகுந்து மெத்தை தலையணைகளைப் பிய்த்து எறிந்தார்கள். சாமான் அறைக்குள்ளே புகுந்து சட்டி பானைகளை உடைத்தார்கள். சமையல் கட்டுக்குள்ளே பிரவேசித்து அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் குண்டாந்தடியை விட்டுத் துளாவிப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆசாமி எங்கேயும் அகப்படவில்லை.
வீட்டு ஸ்திரீகள் இன்னது செய்வது என்று தெரியாது அழுது கொண்டே அங்குமிங்கும் ஓடினார்கள்; குழந்தைகள் 'கோ' என்று கதறினார்கள். இதற்குள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்து வந்து கிட்டாவய்யர், "எதற்காக எல்லாரும் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? எல்லோரும் பேசாமலிருங்கள்; நடக்கிறது நடக்கட்டும்; பகவான் ஒருவர் இருக்கிறார்" என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். முதலில் போலீஸார் தாங்கள் தேடி வந்த ஆசாமி கங்காதரனோ என்று அவனைப் பிடித்து நாலு அடி கொடுத்தார்கள். ஆனால் அவனுடைய தலையில் வைத்திருந்த கட்டுக்குடுமி, புரட்சிக்காரன் அவன் இல்லை என்பதை நிரூபித்தது பிறகு அவனை விட்டுவிட்டார்கள். அநாவசியமாக அடிபட்ட கங்காதரன், "எனக்கு அப்போதே தெரியும், நான் சொன்னால் யார் கேட்கிறார்கள். அந்தக் காலிப் பயலை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது என்று சொன்னேன், கேட்டீர்களா? அருமைப் பிள்ளை என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டீர்கள். அவன் தான் சனீசுவரனுடைய அவதாரம் ஆயிற்றே? வரும்போதே சங்கடத்தையும் கூட அழைத்துக் கொண்டு வருவானே?" என்று இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தான். போலீஸார் வீடு முழுவதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தும் பயனில்லை; தேடிய ஆசாமி அகப்படவில்லை. மேலே, கீழே, அறைக்குள்ளே,அலமாரிக் குள்ளே, அரிசி மூட்டைக்குள்ளே, சாம்பார் பாத்திரத்துக்குள்ளே, மெத்தை தலையணைக்குள்ளே, எங்கேயும் அவனைக் காணவில்லை. தரையிலே சுரங்க அறை ஏதேனும் இருக்குமோ என்று சில போலீஸ் ஜவான்கள் குண்டாந்தடியால் தட்டிக் கூடப் பார்த்தார்கள்; அதிலும் பயனில்லை. அரை மணி நேர அமர்க்களத்துக்குப் பிறகு போலீஸ்காரர்களுக்குத் திரும்பி போக உத்தரவு பிறந்தது.
தாமோதரம்பிள்ளை தம்முடைய வீட்டு வாசலில் வந்து நின்று எதிர்வீட்டில் நடந்த அமர்க்களத்தை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். பார்க்கப் பார்க்க, அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வந்த காரியம் பயன்படாமல் போலீஸ்காரர்கள் வெளியில் வந்ததையும் அவர் பார்த்தார். அவர் தம்முடைய சிநேகிதர் டி.எஸ்.பி.யின் அருகில் சென்று, "இன்று நீங்கள் செய்த காரியம் எனக்கு வெட்கத்தை உண்டாக்குகிறது. இந்தப் பஞ்சாங்கப் பிராமணர்களை இப்படித் தடியால் அடித்ததில் உங்களுக்கு என்ன திருப்தி? இந்தச் சூரத்தனத்தை எல்லாம் ஜப்பானியரிடம் அல்லவா காட்ட வேண்டும்!" என்றார். "மிஸ்டர் பிள்ளை, நீங்கள் விஷயம் தெரியாமல் பேசுகிறீர்கள். 'ஸாபோடாஜ்' கோஷ்டியைச் சேர்ந்த ஒரு பையன் இந்த வீட்டுக்கு வந்திருந்ததாகத் தகவல் கிடைத்தது. காவேரிப் பாலத்தை வெடி வைத்து இடிக்கச் சதியாலோசனை நடந்திருக்கிறது.." "ஆமாம்; காவேரிப் பாலத்தை இடித்து விட்டார்கள், போங்கள், ஸார்! அவர்களுடைய மூளையைச் சொல்கிறதா? உங்களுடைய அக்கிரமத்தைச் சொல்கிறதா? இப்படியெல்லாம் செய்துதானா இராஜாங்கத்தினிடம் விசுவாசத்தை வளர்த்து விட முடியும்?...சரி...தேடிய பையன் அகப்பட்டானா?" "பையன் இந்த வீட்டில் இல்லை ஆனால் இந்த டவுனிலே தான் இருக்கிறான் எப்படியும் பிடித்து விடுவோம்?" என்றார் டி.எஸ்.பி. மோட்டார் சைக்கிளும், ஜீப்பும், குண்டாந்தடிப் போலீஸும் ஏக ஆர்ப்பாட்டத்துடன் அவ்விடத்தி லிருந்து புறப்பட்டுச் சென்றன. ஆத்மநாதய்யரின் வீட்டுக்குள்ளே லலிதாவின் விம்மல் சத்தம் கேட்டது. அத்துடன் அவளுடைய இரண்டு குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கலந்தது. இவ்வாறு சிரஞ்சீவி பாலசுப்பிரமணியனின் ஆண்டு நிறைவுக் கலியாணம் சிறப்பாக முடிவடைந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நான்காம் அத்தியாயம்
பால சந்நியாசி
இரவு மணி பத்து அடித்தது வானத்தைக் கருமேகங்கள் மூடிக்கொண்டிருந்தன. பொச பொசவென்று மழைத் தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று அடித்துக் கொண்டிருந்தது. ஆத்மநாதய்யர் வீட்டுக்குள் சந்தடி இன்னும் அடங்கவில்லை. ஆனால் தாமோதரம்பிள்ளையின் வீட்டில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டன. வீட்டில் இருளோடு நிசப்தம் குடிகொண்டிருந்தது. வீட்டுக்குப் பக்கத்துச் சந்திலிருந்து ஒரு மோட்டார் வண்டி வந்து தாமோதரம்பிள்ளை வீட்டு வாசலில் நின்றது. அடுத்த நிமிஷம் வீட்டுக் கதவு திறந்தது. இருளடைந்திருந்த வீட்டின் உட்புறத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. அந்த உருவத்தின் மீது மங்கலான வீதி விளக்கின் ஒளி விழுந்த போது, இடுப்பில் காஷாயம் தரித்துக் கையில் கமண்டலம் ஏந்திய பால சந்நியாசியின் உருவம் என்று தெரிய வந்தது. அந்தப் பால சந்நியாசி திண்ணை ஓரத்தில் நின்று வீதியின் இருபுறமும் எதிர்ப் பக்கமும் கவனித்துப் பார்த்தார். ஒருவரும் இல்லை என்று அறிந்ததும் மோட்டார் வண்டிக்குள் திறந்திருந்த கதவின் வழியாகப் பாய்ந்து ஏறினார். மறுகணம் வண்டி சத்தம் செய்யாமல் புறப்பட்டது. சிறிது நேரம் வரையில் வண்டிக்குள்ளேயும் நிசப்தம் நிலவியது. தேவபட்டணத்துத் தெருக்களைத் தாண்டி அப்பாலிருந்த சாலையில் வண்டி பிரவேசித்ததும், வண்டி ஓட்டிய அமரநாத், "அப்பா! பிழைத்தோம், இனிப் பயமில்லை!" என்றான். "எனக்கு என்னமோ இன்னும் கொஞ்சம் பயமாகத்தானிருக் கிறது. இந்த மோட்டாரில் இருக்கிற வரையில் எனக்குப் பயந்தான் இறங்கிவிட்டால் கவலையில்லை. எனக்காக நீ இவ்வளவு பெரிய அபாயத்துக்கு உட்பட எண்ணியதை நினைத்தால்...?"
"இந்த தேசத்திலேயே நீ ஒருவன் தான் எதற்கும் துணிந்த வீராதி வீரன் என்று எண்ணம் போலிருக்கிறது!" "அப்படியில்லை, அமரநாத், எந்த நிமிஷத்திலும் கைதியாவதற்குத் தயாராகவே நான் இருந்து வருகிறேன். என்றைக்காவது ஒரு நாள் கைதியாகியே தீரவேண்டும். உன் விஷயம் அப்படியல்ல எனக்காக நீ கஷ்டப்பட வேண்டி நேர்ந்தால்..." "உனக்காக நான் ஒன்றும் கஷ்டப்பட வில்லை. உனக்காக கஷ்டப்பட்டவர்கள் உன் தகப்பனார், தமையன், உன் தங்கையின் மாமனார் முதலியவர்கள். எல்லாரும் இன்றைக்குச் செம்மையாக அடி வாங்கினார்கள். உன் தங்கையும் அம்மாவும் பட்ட வேதனை கொஞ்சமல்ல. அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்குள்ளே எனக்குப் பிராணன் போய்விட்டது." "அதை நினைத்தால் எனக்கு அவமானமாயிருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய முகத்தில் விழிக்க வேண்டி நேர்ந்தால், என்ன சமாதானம் சொல்வேன்? அவர்களை அடிபடும்படி விட்டுவிட்டு நான் தப்பித்துக் கொண்டதைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்...?" "ஒன்றும் நினைக்க மாட்டார்கள் எப்படியாவது நீ தப்பித்துக் கொண்டாயே என்று சந்தோஷப்படுவார்கள். இப்போதும் கூட உன் கதி என்ன ஆயிற்றோ என்று தான் அவர்களுக்குக் கவலை. நீ நிச்சயமாய்த் தப்பித்துக் கொண்டாய் என்று தெரிந்தால் அவர்களுடைய கவலை நீங்கிவிடும்." "என்ன தான் இருந்தாலும் நான் இன்று செய்தது ரொம்ப அவமானமான காரியந்தான். உன்னுடைய வற்புறுத்தலைக் கூட நான் பொருட்படுத்தி யிருக்க மாட்டேன். அவர்களை அடிபட விட்டு நான் ஒளிந்து கொண்டிருக்க என் மனம் இடம் கொடுத்திராது. டில்லியில் இருந்து என் அத்தங்கா சீதாவைப் பற்றிக் கடிதம் வரவில்லையென்றால் நானே போலீஸ் அதிகாரிகளிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்திருப் பேன்.""அதனால் யாருக்கும் எந்தவிதச் சந்தோஷமும் ஏற்பட்டிராது. உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மன வேதனைப் பட்டிருப்பார்கள், என் தகப்பனார் உள்படத்தான்!"
"தாமோதரம்பிள்ளை என் விஷயத்தில் காட்டிய அனுதாபத்தை நினைத்தால் தான் எனக்குப் பரம ஆச்சரியமா யிருக்கிறது." "அதற்குக் காரணம் என்னவென்று உனக்குத் தோன்றுகிறது? ஊகித்துச் சொல், பார்க்கலாம்!" "காரணம் வேறு என்ன இருக்க முடியும்? நான் உன்னுடைய சிநேகிதன் என்ற காரணந்தான்." "அதெல்லாம் இல்லை; இங்கிலீஷ்காரன் சிங்கப்பூரில் அடிபட்டதி லிருந்து நம்மவர்கள் எல்லாருடைய மனமும் மாறிப் போயிருக்கிறது. இந்த இங்கிலீஷ் ராஜாங்கம் எப்படியும் இந்தியாவை விட்டுப் போய்விடப் போகிறது என்று சிறு பிள்ளைகள் முதல் வயது முதிர்ந்த கிழவர்கள் வரையில் எல்லாரும் நம்புகிறார்கள்..." "அதற்கும் உன்னுடைய தகப்பனார் எனக்குச் செய்த உதவிக்கும் என்ன சம்பந்தம்?" "சம்பந்தம் இருக்கிறது; நாளைக்கு இங்கிலீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போய்விட்டால், அடுத்தாற்போல் அதிகாரத்துக்கு யார் வருவார்கள்? உன்னைப் போன்ற காங்கிரஸ் புரட்சிக் காரர்கள் ஒருவேளை வந்தாலும் வருவீர்கள். எல்லாவற்றுக்கும் 'கப்பலில் பாதிப் பாக்குப் போட்டு வைக்க லாம்' என்று கருதி தான் அப்பா உன்னைத் தப்புவிக்க முன் வந்தார்." "அது உண்மையானால், உன் தகப்பனாரின் பாதிப் பாக்கு நஷ்டந்தான். என்னைப் போன்ற ஓட்டைக் கப்பலில் பாக்குப் போட்டு என்ன பிரயோஜனம்? ஆனால், நீ சொல்லும் காரணத்தை நான் ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டேன். உன்னுடைய சிநேகிதன் என்ற காரணத்துக்காகவும் என் பேரில் உள்ள பிரியத்தினாலுந்தான் இந்தக் காரியம் செய்திருக்க வேண்டும்." "போனால் போகட்டும், நீ சொல்கிறபடி வைத்துக் கொள்ளலாம். உன் அத்தங்காளின் விஷயம் என்னவோ சொன்னாயே?" "என் தங்கை லலிதாவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை தனக்குச் சீதாவைத் தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளைக் கலியாணம் செய்து கொண்டானல்லவா? அந்தக் காதல் கலியாணம் பற்றி அப்போது நாமெல்லோரும் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? உண்மையில் அந்தக் கலியாணம் பெரிய துரதிர்ஷ்டமாய் முடிந்திருக்கிறது. அவர்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமே கிடையாது அமரநாத்! ஓயாமல் சண்டை தான்."
"நீ வீணாக மிகைப்படுத்திக் கூறுகிறாய், சூரியா! நம்முடைய தேசத்தில் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது தம்பதிகள் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லை என்று அர்த்தமா? நானும் சித்ராவும் தினம் டஜன் தடவை சண்டை போட்டுக் கொள்கிறோம்..." "உங்களுடைய விஷயம் வேறு, அமரநாத்! உங்களைப் போன்ற தம்பதிகள் உலகத்தில் வெகு அபூர்வம். உங்களுடைய சண்டையெல்லாம் காதலர்களின் சண்டை; வேடிக்கைச் சண்டை. சீதா - சௌந்தரராகவனுடைய விஷயம் அப்படியல்ல பூனையும் எலியும் போல அவர்களுடைய வாழ்க்கை நடந்து வருகிறது." "சௌந்தரராகவன் சீமைக்குப் போய் வந்தவன்; பெரிய சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவன். ஆகையால் தன் மனைவி ஆங்கில தோரணையில் நவநாகரிகமாக வாழ வேண்டும் என்று நினைக்கலாம். உன் அத்தங்காள் அதற்குச் சம்மதியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும்; எத்தனையோ ஐ.சி.எஸ். காரர்கள் இந்தக் காரணத்துக்காகவே மனைவியைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்." "சீதா விஷயத்தில் அந்தக் காரணம் சொல்ல முடியாது அமரநாத்! முதலிலே ஒருவேளை கொஞ்சம் தயங்கியிருக்கலாம். பிற்பாடு சௌந்தரராகவன் நாகரிக ஏணியில் ஒரு படி ஏறினால் சீதா இரண்டு படி ஏறினாள். எனக்கு கூட, 'ஐயோ! அத்தங்கா இப்படி மாறிப்போய்விட்டாளே?' என்று வருத்தமாயிருந்தது. அதனால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை சௌந்தரராகவனுடைய மூர்க்கத்தனம் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது." "இப்போது தெரிகிறது, எனக்குக் காரணம். நம்மில் இங்கிலீஷ் படித்த இளைஞர்கள் கலியாணமான புதிதில் தங்களுடைய மனைவிமார் நவநாகரிகமடைந்து எல்லாருடனும் கூச்சமின்றிப் பழக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்புறம் அவர்களுக்கு இது பிடிக்காமல் போய்விடுகிறது. ஹிந்து தர்மத்தின்படி பெண்கள் அடக்கமாக இருந்தால் தான் நல்லது என்று நினைக்கிறார்கள். அப்படி ஆண் பிள்ளைகள் நினைக்கும் போது பெண் பிள்ளைகளுக்குப் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போகப் பிடிப்பதில்லை... நான் சொல்கிறதைக் கேள், சூரியா! அந்தத் தம்பதிகள் விஷயத்தில் நீ ஒன்றும் தலையிடாமல் இருந்துவிடு. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகப் போய்விடும்!" "அப்படி என்னால் இருக்க முடியவில்லை, அமரநாத்! வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்ட என் அத்தை இறப்பதற்கு முன்னால் தன்னுடைய அனாதைப் பெண்ணைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டாள் அதை என்னால் மறக்க முடியவில்லை!" என்றான் சூரியா.
சாலையின் இருபுறத்திலும் கழனிகளில் தண்ணீர் ததும்பி அலை மோதிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் காவேரி நதியின் பிரவாகம். மேட்டார் வண்டி சாலை வளைவில் திரும்பும் போது நெடுந்தூரத்துக்கு மோட்டார் விளக்கின் வெளிச்சம் அடித்து நாலாபுறமும் பரவியிருந்த நீர்வளத்தைக் காட்டியது. கழனியிலும் காவேரியிலும் இலேசான மழைத் தூற்றல் விழுந்தபோது உண்டான சலசலசல சத்தம் மந்திர ஸ்தாயி சங்கீதத்தைப் போல் மனதுக்கு அமைதியை உண்டாக்கியது. நல்ல சங்கீதக்கச்சேரியின் நடுவில் அரசியல் சம்பாஷணை தொடங்கும் ரசிகர்களைப் போல் திடீர் திடீரென்று தவளைகள் உற்சாகமடைந்து வரட்டுக் கூச்சல் போட்டன. மோட்டார் வண்டியின் முன் கண்ணாடியில் விழும் மழைத் துளிகளைத் துடைக்கும் கருவிகள் டக் டக் என்ற சத்தத்தோடு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. "அடாடா! நீர்வளம் என்றால் இது அல்லவா நீர்வளம்? வடநாட்டில் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் வறண்ட பிரதேசங்கள், இந்த மாதிரி நீர்வளம் எங்கேயும் கிடையாது" என்றான் சூரியா. "நீ வங்காளத் துக்கு வந்ததில்லை, சூரியா! தமிழ்நாட்டைக் காட்டிலும் நீர்வளம் நிறைந்தது வங்காளம். அதிலும் கீழ் வங்காளம் அதிக வளம் பொருந்தியது. மழைக் காலத்தில் எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயந்தான்!" என்று அமரநாத் கூறினான்.
"அப்படிப்பட்ட நீர்வ