ponniyin celvan
of kalki, part 2E
(in tamil script, unicode format)

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்


இரண்டாம் பாகம் - சுழற்காற்று



நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை


Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இரண்டாம் பாகம் - சுழற்காற்று


நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - "அதோ பாருங்கள்!"
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - பூங்குழலியின் கத்தி
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - "நான் குற்றவாளி!"
நாற்பத்து நான்காம் அத்தியாயம் - யானை மிரண்டது!
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - சிறைக் கப்பல்
நாற்பத்தாறாம் அத்தியாயம் - பொங்கிய உள்ளம்
நாற்பத்தேழாம் அத்தியாயம் - பேய்ச் சிரிப்பு
நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - 'கலபதி'யின் மரணம்
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - கப்பல் வேட்டை
ஐம்பதாம் அத்தியாயம் - "ஆபத்துதவிகள்"



நாற்பத்தொன்றாம் அத்தியாயம்
"அதோ பாருங்கள்!"




சேநாபதி பூதி விக்கரமகேசரி கூறிய செய்தியைக் கேட்டதும் இளவரசரின் முகத்தில் புன்னகை அரும்பியது. "கடைசியாக என் உள்ளத்தின் போராட்டத்துக்கு ஒரு முடிவு வந்துவிட்டது போல் காண்கிறது" என்று மெல்லிய குரலில் தமக்குத்தாமே பேசிக்கொள்கிறவர் போலச் சொல்லிக் கொண்டார்.
பார்த்திபேந்திரன் கொதித்தெழுந்தான். "சேநாதிபதி! என்ன சொன்னீர்? இது உண்மைதானா? என்னிடம் ஏன் இது வரையில் சொல்லவில்லை? இந்தப் பித்துக்குளிப் பெண்ணை நீர் நம்முடன் கட்டி இழுத்து வந்ததற்குக் காரணம் இப்போதல்லவா தெரிகிறது? மறுபடியும் கேட்கிறேன்; பழுவேட்டரையர்கள் இளவரசரைச் சிறைப்படுத்தி வரக் கப்பல்களை அனுப்பியிருப்பது உண்மையா?" என்று கேட்டான்.

"ஆம், ஐயா! இந்தப் பெண் கண்ணால் பார்த்ததாகவும், காதால் கேட்டதாகவும் கூறுவதை நம்புவதாயிருந்தால் அது உண்மைதான்!"

"ஆகா! அந்தக் கிழவர், திருக்கோவலூர் மிலாடுடையார், கூறியது உண்மையாயிற்று. பழுவேட்டரையர்களை உள்ளபடி உணர்ந்தவர் அவர்தான்! சேநாதிபதி! இத்தகைய செய்தியை அறிந்த பிறகும் ஏன் சும்மா இருக்கிறீர்? பராந்தக சக்கரவர்த்தியின் குலத்தோன்றலை, சுந்தர சோழரின் செல்வப் புதல்வரை, நாடு நகரமெல்லாம் போற்றும் இளவரசரை, தமிழகத்து மக்களெல்லாம் தங்கள் கண்ணினுள் மணியாகக் கருதும் செல்வரை, ஆதித்த கரிகாலருடன் பிறந்த அருள்மொழிவர்மரை, இந்த அற்பர்களாகிய பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தி வர ஆட்களை அனுப்பும்படி ஆகிவிட்டதா? இனியும் என்ன யோசனை? உடனே படைகளுடன் புறப்பட்டுச் சென்று இளவரசரைச் சிறைப்படுத்த வந்தவர்களை அழித்து இந்த இலங்கைத் தீவிலேயே அவர்களுக்குச் சமாதியை எழுப்புவோம்!... பிறகு நாம் போட்ட திட்டத்தின்படி காரியத்தை நடத்துவோம்! கிளம்புங்கள்! இன்னும் ஏன் தயக்கம்?" என்று பார்த்திபேந்திரன் பொரி பொரித்துக் கொட்டினான்.

சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி அவனைப் பார்த்து "பார்த்திபேந்திரா! நீ இப்படித் துடிப்பாய் என்று எண்ணித்தான் நான் முன்னமே இந்தப் பெண் கொண்டு வந்த சேதியை உன்னிடம் சொல்லவில்லை. நன்றாக யோசித்துச் செய்ய வேண்டிய காரியம். அவசரப்படுவதில் பயனில்லை!" என்றார்.

"யோசனை செய்ய வேண்டுமா? என்ன யோசனை? எதற்காக யோசனை? இளவரசே! நீங்கள் சொல்லுங்கள். இனி யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? இதற்கு முன் ஏதேனும் தங்களுக்குத் தயக்கமிருந்திருந்தாலும், இனி தயங்குவதற்கு இடமில்லையே? பழுவேட்டரையர்களைப் பூண்டோடு அழித்து விடவேண்டியது தானே?"

அப்போது இளவரசர், "சேநாதிபதியின் மனத்தில் உள்ளதையும் தெரிந்து கொள்ளலாமே? ஐயா! தாங்கள் எதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்கிறீர்கள்?" என்று எவ்விதப் படபடப்புமின்றி நிதானமாகக் கேட்டார்.

"தங்களைச் சிறைப்படுத்துவதற்கு... இந்த வார்த்தைகளைச் சொல்லவும் என் வாய் கூசுகிறது... ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களின் சக்கரவர்த்தியின் கட்டளையோடு வந்திருந்தால் நாம் என்ன செய்வது? அப்போதும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதா?"

இதைக் கேட்ட பார்த்திபேந்திரன் கடகடவென்று சிரித்து விட்டு, "அழகாயிருக்கிறது, தாங்கள் வார்த்தை! சக்கரவர்த்தி சொந்தமாகக் கட்டளை போடும் நிலையில் இருக்கிறாரா? அவரையேதான் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருக்கிறார்களே!" என்றான்.

இச்சமயத்தில் வந்தியத்தேவன், குறுக்கிட்டு,"பல்லவ தளபதி கூறுவது முற்றும் உண்மை. நானே என் கண்களால் பார்த்தேன். சக்கரவர்த்தியைச் சிறையில் வைத்திருப்பது போலத்தான் பழுவேட்டரையர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பமின்றி யாரும் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது; பேச முடியாது.நான் ஒரு வார்த்தை சொல்லத் துணிந்ததற்காக என்னை அவர்கள் படுத்திய பாட்டை நினைத்தால்... அப்பா! சின்னப் பழுவேட்டரையரின் இரும்புக்கை பற்றிய இடத்தில் இன்னும் எனக்கு வலிக்கிறது!" என்று கூறித் தன் மணிக்கட்டைத் தடவிக் கொண்டான்.

"அப்படிச் சொல், வல்லவரையா! உன்னை என்னமோவென்று நினைத்தேன். இளவரசருக்கும், சேநாதிபதிக்கும் இன்னொரு முறை நன்றாக எடுத்துச் சொல்!" என்றான் பார்த்திபேந்திரன்.

இளவரசர், "வேண்டாம்; அவர் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டார்!" என்று கூறி, வந்தியத்தேவனைப் பார்த்து, "ஐயா! நீர் அந்தப் பெண்ணைப் போய் அழைத்து வருவதாகச் சொன்னீரே! ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறீர்? அவள் கொண்டு வந்த செய்தியை அவள் வாய்மொழியாகவே விவரமாகக் கேட்கலாம்! கொஞ்சம் கிறுக்குப் பிடித்த பெண்போலத் தோன்றுகிறது. எப்படியாவது நல்ல வார்த்தை சொல்லி அவளை இங்கே அழைத்து வாருங்கள்!" என்றார்.

"போகிறேன், இளவரசே! போய் அழைத்து வருகிறேன். பழுவேட்டரையர்களிடம் தாங்கள் சிறைப்படுவது என்பதை மட்டும் என்னால் சகிக்க முடியாது. என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் அது நடவாத காரியம்!" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் சென்றான்.

"சேநாதிபதி தங்களுடைய கருத்து என்னவென்று சொல்லவில்லையே?" என்று அருள்மொழிவர்மர் கேட்டார்.

"என்னுடைய கருத்து இதுதான். பழுவேட்டரையர்கள் அனுப்பியிருக்கும் ஆட்களைத் தாங்கள் சந்திக்கக் கூடாது. பார்த்திபேந்திரன் கொண்டு வந்திருக்கும் கப்பலில் ஏறித் தாங்கள் உடனே காஞ்சிக்குப் போய் விடுங்கள். நான் தஞ்சாவூருக்குப் போகிறேன். அங்கே சக்கரவர்த்தியை நேரில் பார்த்து உண்மை நிலையைத் தெரிந்து கொள்கிறேன்..."

"தஞ்சாவூருக்குத் தாங்கள் போவது சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுப்பது போலத்தான். போனால் திரும்பி வரமாட்டீர்கள். அப்படியே அங்குள்ள பாதாளச் சிறையில் போய்விடுவீர்கள். சக்கரவர்த்தியைப் பார்க்கவும் தங்களால் முடியாது..."

"என்ன வார்த்தை சொல்கிறாய்? என்னைச் சிறையில் அடைக்கக் கூடிய வல்லமையுள்ளவன் சோழ நாட்டில் எவன் இருக்கிறான். சக்கரவர்த்தியை நான் சந்திக்கக் கூடாது என்று தடுக்கக் கூடிய ஆண்மை உள்ளவன் எவன் இருக்கிறான்? மேலும், அங்கே முதன் மந்திரி அநிருத்த பிரமராயர் இருக்கிறார்..."

"பிரமராயர் இருக்கிறார். இருந்து என்ன பயன்? அவருக்கே சக்கரவர்த்தியைப் பார்க்க முடியவில்லை. இதோ அவருடைய சிஷ்யன் நிற்கிறானே, அவன் என்ன சொல்கிறான் என்று கேட்டுப் பார்க்கலாமே?" சேநாதிபதி ஆழ்வார்க்கடியான் பக்கம் திரும்பி, "ஆம்; இந்த வைஷ்ணவன் இங்கு நிற்பதையே மறந்துவிட்டேன். திருமலை! ஏன் இப்படி மௌனமாக நிற்கிறாய்? சற்று முன் இளவரசர் சொன்னதுபோல் நீயும் ஊமையாகி விட்டாயா?" என்றார்.

"சேநாதிபதி! கடவுள் நமக்கு இரண்டு காதுகளைக் கொடுத்திருக்கிறார்; வாய் ஒன்றைத்தான் கொடுத்திருக்கிறார். ஆகையால் 'செவிகளை நன்றாக உபயோகப்படுத்து; பேசுவதைக் கொஞ்சமாக வைத்துக்கொள்' என்று என் குருநாதர் எனக்குச் சொல்லியிருக்கிறார். முக்கியமாக, பெரிய ராஜாங்க விஷயங்களைப் பற்றிப் பேச்சுக்கள் நடக்கும் இடத்தில் அந்த விரதத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வரச் சொல்லியிருக்கிறார்."

"குருவின் வாக்கை நன்றாக நிறைவேற்றுகிறாய். நாங்களே இப்போது கேட்பதனால் சொல். உன்னுடைய யோசனை என்ன?"

"எதைப் பற்றி என் யோசனையைக் கேட்கிறீர்கள், சேநாதிபதி?"

"இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்த விஷயமாகத்தான். இளவரசர் இப்போது என்ன செய்வது உசிதம்? இலங்கையிலேயே இருக்கலாமா? அல்லது காஞ்சிக்குப் போகலாமா?"

"என்னுடைய உண்மையான கருத்தைச் சொல்லட்டுமா? இளவரசர் அநுமதித்தால் சொல்கிறேன்."

ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த அருள்மொழிவர்மர் ஆழ்வார்க்கடியானை ஏறிட்டுப் பார்த்து, "சொல் திருமலை, தாராளமாய் மனத்தை விட்டுச்சொல்!" என்று தைரியப்படுத்தினார்.

"இந்த இலங்கைத் தீவிலேயே மிகக் கடுமையான கட்டுக் காவல் உள்ள சிறைச்சாலை எது உண்டோ, அதைக் கண்டுபிடித்து அதற்குள்ளே இளவரசரை அடைத்துப் போடவேண்டும்! வௌியில் பலமான காவலும் போடவேண்டும்!"

"இது என்ன உளறல்?" என்றார் சேநாதிபதி.

"விளையாட இதுதானா சமயம்?" என்றான் பார்த்திபேந்திரன்.

"நான் உளறவும் இல்லை; விளையாடவும் இல்லை. மனத்தில் உள்ளதைச் சொன்னேன். நேற்று இரவு இளவரசர் அநுராதபுரத்து வீதிகளின் வழியாக வந்து கொண்டிருந்தார். அவர் தலைமீது ஒரு வீட்டின் முன் முகப்பு இடிந்து விழுந்தது. பிறகு ஒரு வீட்டில் நாங்கள் படுத்திருந்தோம். நல்ல வேளையாக ஒரு காரியத்தின் பொருட்டு எழுந்து போய் விட்டோம். சற்று நேரத்துக்கெல்லாம் அந்த வீடு தீப்பற்றி எரிந்தது. இவையெல்லாம் உண்மையா, இல்லையா என்று இளவரசரையே கேளுங்கள்!"

இருவரும் இளவரசரை நோக்கினார்கள். அவருடைய முகபாவம் ஆழ்வார்க்கடியானுடைய கூற்றை உறுதிப்படுத்தியது. "இந்த அபாயங்கள் எல்லாம் யாருக்காக நேர்ந்தவையென்று கேளுங்கள். என்னையோ அல்லது வந்தியத்தேவனையோ கொல்லுவதற்காக யாராவது வீட்டைக் கொளுத்துவார்களா?"

பார்த்திபேந்திரன் உடனே துள்ளிக் குதித்து "இளவரசரைக் கொல்லுவதற்குத்தான் யாரோ முயற்சி செய்தார்கள். இதனால் இளவரசர் என்னுடன் காஞ்சிக்கு வரவேண்டிய அவசியம் உறுதிப்படுகிறது!" என்றான்.

"கூடவே கூடாது! தங்களுடன் இளவரசரை அனுப்புவதைக் காட்டிலும் பழுவேட்டரையர்களிடமே பிடித்துக் கொடுத்துவிடலாம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"வைஷ்ணவனே! என்ன சொன்னாய்!" என்று பார்த்திபேந்திரன் கத்தியை உருவினான்.

சேநாதிபதி அவனைக் கையமர்த்தி, "திருமலை! ஏன் அவ்விதம் சொல்லுகிறாய்? பார்த்திபேந்திர பல்லவர் சோழ குலத்தின் அருந்துணைவர் என்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.

"தெரியும், சேநாதிபதி, தெரியும்! சிநேகம் இருந்து விட்டால் மட்டும் போதுமா?"

"பார்த்திபேந்திரர் சிநேகத்துக்காகவே உயிரையும் கொடுக்கக் கூடியவர் என்பதை அறிவேன், திருமலை!"

"அதுவும் இருக்கலாம். ஆனால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு மறுமொழி கூறச் சொல்லுங்கள். நாங்கள் முந்தா நாள் மாலை தம்பள்ளைக்கு அருகில் போய்க் கொண்டிருந்தபோது இவருடன் இரண்டு பேர் வருவதைப் பார்த்தோம்! அந்த மனிதர்கள் யார், இப்பொழுது அவர்கள் எங்கே என்று இவரைக் கேட்டுச் சொல்லுங்கள்."

பார்த்திபேந்திர பல்லவன் சிறிது திடுக்கிட்டுப் போனான். கொஞ்சம் தயக்கத்துடனே கூறினான்: "திரிகோண மலையில் அவர்களை நான் சந்தித்தேன். இளவரசர் இருக்குமிடத்தை எனக்குக் காட்டுவதாக அவர்கள் அழைத்து வந்தார்கள். அநுராதபுரத்தில் திடீரென்று மறைந்து விட்டார்கள். எதற்காகக் கேட்கிறாய், வைஷ்ணவனே! அவர்களைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"தெரியும்! சோழ குலத்தை அடியோடு ஒழித்துவிடச் சபதம் செய்திருப்பவர்களில் அவர்கள் இருவர் என்று எனக்குத் தெரியும். நேற்று அநுராதபுரத்தில் அவர்கள்தான் இளவரசரை கொல்லப் பார்த்தார்கள் என்று ஊகிக்கிறேன்... ஆகா! அதோ பாருங்கள்" என்று ஆழ்வார்க்கடியான் சுட்டிக் காட்டினான்.

அவன் சுட்டிக் காட்டிய இடம் அம்மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தது. நெருங்கிப் படர்ந்திருந்த மரங்களுக்கு இடையில் ஒரு அழகிய யுவதியும், யௌவன வாலிபனும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் என்பது ஊகிக்கக் கூடியதாயிருந்தது. பேசிக் கொண்டேயிருந்த வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி வீசி எறிந்தான். கத்தி ஒரு புதரில் போய் விழுந்தது. 'வீல்' என்று ஒரு குரல் கேட்டது.


பக்க தலைப்பு



நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
பூங்குழலியின் கத்தி




பாழடைந்த மண்டபத்திலிருந்து பூங்குழலியைத் தேடிக் கொண்டு சென்ற வந்தியத்தேவன், அவள் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டான். இலேசான விம்மல் அவளிடமிருந்து வந்து கொண்டிருந்தது. குரலை மிகவும் நயப்படுத்திக் கொண்டு, "பூங்குழலி!" என்றான். சத்தம் கேட்ட பூங்குழலி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். "நீ தானா?" என்று சொல்லி மறுபடியும் திரும்பிக் கொண்டாள்.

"நான்தான்! என்பேரில் உனக்கு என்ன கோபம்?"

"உன் பேரில் எனக்கு எந்தவிதக் கோபமும் இல்லை."

"பின்னே ஏன் உனக்கு இவ்வளவு சிடுசிடுப்பு?"

"எனக்கு ஆண் பிள்ளைகளைக் கண்டாலே பிடிக்கவில்லை."

"இளவரசரைக் கூடவா?" பூங்குழலி திரும்பிக் கண்களில் கனல் எழும்படி வந்தியத்தேவனைப் பார்த்தாள்.

"ஆமாம்; அவரைத்தான் முக்கியமாகப் பிடிக்கவில்லை!" என்றாள்.

"அப்படி அவர் என்ன குற்றத்தைச் செய்துவிட்டார்?"

"என்னை அவருக்கு ஞாபகமேயில்லை. என்னை அவர் முகமெடுத்துக் கூடப் பார்க்கவில்லை."

"உன்னை அவருக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. நான் உன்னைப் பற்றிக் கூறியதும், 'ஓ! சமுத்திர குமாரியை எனக்குத் தெரியாதா? என்றார்.

"பொய் சொல்லுகிறாய்."

"நீயே நேரில் வந்து கேட்டுக்கொள்."

"என்னை நினைவிருந்தால், ஏன் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?"

"அவர் பேசினார்; நீதான் மறுமொழி சொல்லாமல் ஓடி வந்துவிட்டாய்."

"அந்தமாதிரி பேச்சை நான் சொல்லவில்லை. தெரிந்தவர்களைப் பார்த்தால், 'என்ன? ஏது?' என்று விசாரிப்பது கிடையாதா? நீ சொல்வது பொய்! அவர் என்னை முகமெடுத்தே பார்க்கவில்லை."

"பூங்குழலி! அதற்கு ஒரு காரணம் இருக்கிறது."

"என்ன காரணம்?"

"இளவரசருக்கு இப்போது ரொம்ப கஷ்டகாலம்."

"யார் சொன்னது?"

"எல்லா ஜோசியர்களும் சொல்லியிருக்கிறார்கள். குடந்தை சோதிடர் என்னிடமே சொன்னார்."

"உன்னிடம் என்ன சொன்னார்?"

"இளவரசருக்குக் கொஞ்சநாள் வரையில் கஷ்டத்துக்கு மேல் கஷ்டமாக வந்து கொண்டிருக்கும் என்று சொன்னார். அவரைச் சேர்ந்தவர்களுக்குக்கெல்லாம் கஷ்டங்கள் வரும் என்று சொன்னார். இது இளவரசருக்கும் தெரியும். ஆகையினால் அவர் யாரும் தம்மோடு சிநேகிதமாக இருப்பதை விரும்பவில்லை. தமக்கு வரும் கஷ்டம் தம்மோடு போகட்டும், என்று நினைக்கிறார்."

"நீ மட்டும் ஏன் அவரோடு சிநேகமாயிருக்கிறாய்?"

"நீ சற்று முன் பார்க்கவில்லையா? என்னையும் சண்டை பிடித்துத் துரத்த அவர் பிரயத்தனப்படுகிறார். நடுச் சாலையில் ஒரு காரணமும் இல்லாமல் அவர் என்னோடு கத்திச் சண்டை போட்டார்.நீங்கள் வந்ததினால் சண்டை நின்றது."

"அவர் துரத்தினாலும் நீ அவரை விட்டுப் போக மாட்டாயா?"

"மாட்டவே மாட்டேன். அவருக்கு வரும் கஷ்டங்களையெல்லாம் நானும் பகிர்ந்து அநுபவிப்பேன்."

"அவரை உனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறதா?"

"ஆமாம்; ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது."

"எதனால் பிடித்திருக்கிறது?"

"காரணம் சொல்லத் தெரியாது.அவரைப் பார்த்தவுடனே அவர்மேல் பிரியம் ஏற்பட்டு விட்டது"

"எனக்கும் அப்படித்தான்!" என்றாள் பூங்குழலி. உடனே தான் அவ்விதம் மனம் திறந்து சொல்லிவிட்டதைப் பற்றி வருந்தி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

"உனக்கு இளவரசரிடம் பிரியம் என்று எனக்குத் தெரியும். ஆகையினால் தான் உன்னை அழைத்துப் போக வந்தேன். என்னுடன் வா!"

"வரமாட்டேன்!" என்று பூங்குழலி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

"வராவிட்டால் பலவந்தமாக உன்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு போவேன்."

"அருகில் நெருங்கினால் இதோ கத்தி இருக்கிறது ஜாக்கிரதை!" என்று பூங்குழலி தன் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் காட்டினாள்.

"பாவிப் பெண்ணே! எதற்காக என்னைக் குத்திக் கொல்ல வருகிறாய்? இளவரசரிடம் உன்னைப்பற்றி ஞாபகப் படுத்தினேனே, அதற்காகவோ?"

"நீ பொய் சொல்லுகிறாய்; அவரிடம் என்னைப் பற்றி நீ ஒன்றுமே சொல்லவில்லை!"

"போனால் போகட்டும்; இளவரசரைப் பிடித்துக்கொண்டு போக இரண்டு கப்பல்கள் வந்திருப்பதாகச் சொன்னாய் அல்லவா அதை அவரிடம் வந்து சொல்லிவிட்டு அப்புறம் எப்படியாவது தொலைந்து போ!" .

"எல்லா விவரங்களும் சேநாதிபதியிடம் சொல்லி விட்டேன்."

"இளவரசர் உன்னிடம் நேரில் கேட்டு அறிய விரும்புகிறார்".

"அவர் முன்னால் வந்தால் நான் ஊமையாகி விடுவேன்."

"ஊமைச்சிகளிடத்தில் இளவரசருக்கு ரொம்பப் பிரியம்!"

"சீச்சீ! நீ பரிகாசம் செய்கிறாய்!" என்று சொல்லிப் பூங்குழலி கத்தியை ஓங்கினாள்.

"அப்படியானால் நீ என்னுடன் வரப் போவதில்லையா?"

"இல்லை!"

"சரி; நான் போகிறேன்! என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இரண்டு அடி எடுத்து வைத்தான். மறுபடியும் சட்டென்று திரும்பிப் பூங்குழலியின் கையிலிருந்து அவளுடைய கத்தியைப் பிடுங்கி வீசி எறிந்தான்!

வீசி எறிந்த கத்தி வெகுதூரம் சுழன்று சுழன்று சென்று ஓர் அடர்ந்த புதரில் விழுந்தது. கத்தி விழுந்த இடத்திலிருந்து 'வீல்' என்று குரல் கேட்டது. அது மனிதக் குரலா, ஏதேனும் ஒரு விலங்கு அல்லது பட்சியின் குரலா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. கத்தியைப் பிடுங்கியதும் வந்தியத்தேவனைக் கடுங்கோபத்துடன் பார்த்த பூங்குழலி மேற்கூறிய சப்தத்தைக் கேட்டதும் கத்தி விழுந்த இடத்தை ஆர்வத்துடன் நோக்கினாள். பிறகு, இருவரும் வியப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மெள்ளமெள்ள நடந்து கத்தி விழுந்த இடத்துக்கருகிலிருந்து புதரை நெருங்கிப் பார்த்தார்கள். செடிகளிலும் தரையிலும் புது இரத்தம் சிந்தியிருந்தது. மற்றபடி அங்கு மனிதரும் இல்லை; விலங்கும் இல்லை. பூங்குழலியின் கத்தியையும் காணவில்லை!

"பார்த்தாயா பூங்குழலி! நான் கூறியதன் உண்மை இப்போதாவது தெரிகிறதா? இளவரசரை நாலா பக்கமும் அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன. எந்த நேரத்தில் எந்த இடத்திலிருந்து எப்படிப்பட்ட அபாயம் வருமென்று சொல்ல முடியாது. தற்செயலாக உன்னுடைய கத்தியைப் பிடுங்கி நான் விட்டெறிந்தேன். அதிலிருந்து இங்கே யாரோ பதுங்கிக் கொண்டிருந்தது. தெரிய வந்தது. எதற்காக பதுங்கியிருக்க வேண்டும் என்று நீயே யோசித்துப் பார்! இளவரசரைச் சமயம் பார்த்துத் தீர்த்துக் கட்டுவதற்காகத்தான்! கோடிக்கரைக்கு நான் வந்ததற்கு முதலாவது நாள் இரண்டு பேரை உன் அண்ணன் படகேற்றி அழைத்துப் போனதாகவும், அவர்களைப் பற்றி உனக்குச் சந்தேகம் தோன்றியதாகவும் சொல்லவில்லையா? அதை ஞாபகப்படுத்திக் கொள்! இப்படிப்பட்ட சமயத்தில் இளவரசரிடம் பிரியம் உள்ளவர்கள் அவரை விட்டுப் போகலாமா?" என்று வந்தியத்தேவன் மூச்சு விடாமல் பேசி நிறுத்தினான்.

"அவர் என்னைப் போகச் சொன்னால் என்ன செய்வது?" என்று பூங்குழலி கேட்டாள்.

"அவர் போகச் சொன்னாலும் நாம் போகக்கூடாது!"

பூங்குழலி சற்று யோசித்துவிட்டு, "இங்கே பதுங்கியிருந்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டாமா?" என்றாள்.

"அது நம்மால் முடியாத காரியம். இந்த அடர்ந்த காட்டில் எங்கேயென்று தேடிக் கண்டுபிடிப்பது? அதிக நேரம் தாமதித்தால் இளவரசருக்கு உண்மையாகக் கோபம் வந்துவிடும். நம்மை விட்டுவிட்டு எல்லாரும் போய்விடுவார்கள்! பேசாமல் என்னுடன் வா"
"சரி வருகிறேன்!" என்று பூங்குழலி கூறினாள்.

இருவரும் மற்றவர்கள் இருந்த மண்டபத்தை நோக்கி நடந்தார்கள்.

மண்டபத்திலிருந்தவர்கள், வந்தியத்தேவனும் பூங்குழலியும் அருகில் வந்ததும், மேற்படி சம்பவத்தைப்பற்றியே கேட்டார்கள். "எதற்காகக் கத்தியை எறிந்தாய்? 'வீல்' என்ற சத்தம் கேட்டதே, அது என்ற சத்தம்?" என்று வினவினார்கள்.

"புதரில் ஏதோ மிருகம் சிறுத்தையோ அல்லது நரியோ பதுங்கியிருந்ததுபோல் தோன்றியது. அதனால் இவளுடைய கத்தியைப் பிடுங்கி வீசி எறிந்தேன். கிட்டப் போய்ப் பார்த்தோம். ஒன்றும் இல்லை" என்றான் வந்தியத்தேவன்.

"அது போனால் போகட்டும்; இந்தப் பெண்ணிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்!" என்றார் சேநாதிபதி.

பூங்குழலி வந்ததிலிருந்து இளவரசரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசர் அப்போது அவளை ஏறிட்டுப் பார்த்தார்.

"சீச்சீ! இந்த நெஞ்சு எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறது? தொண்டையில் வந்து ஏதோ அடைக்கிறதே, அது என்ன? கண்ணில் எதற்காகக் கண்ணீர் தளும்புகிறது! அசட்டுப் பெண்ணே! உன் தைரியம் எல்லாம் எங்கே போயிற்று? அலை கடலையும், பெரும் புயலையும் கண்டு கலங்காத உன் உள்ளம் ஏன் இப்போது இப்படித் தத்தளிக்கிறது? கொடிய பயங்கர வேங்கைப் புலியின் கொள்ளிக் கண்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிவு படைத்த உன் கண்கள் ஏன் இப்போது மங்கல் அடைகிறது! பெண்ணே! மறுபடியும் பைத்தியக்காரி என்ற பட்டம் சூட்டிக் கொள்ளாதே! இளவரசரை நிமிர்ந்து பார்! அவர் கேட்கும் கேள்விகளுக்குக் கணீர் என்று மறுமொழி சொல்லு! உன்னை என்ன செய்துவிடுவார்? கருணை மிகுந்தவர், தயாளு என்று உலகமெல்லாம் சொல்கிறதே! பேதைப் பெண்ணாகிய உன்னை இளவரசர் என்ன செய்து விடுவார்?..." "சமுத்திரகுமாரி! என்னை உனக்கு நினைவிருக்கிறதா?" என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.


பக்க தலைப்பு



நாற்பத்துமூன்றாம் அத்தியாயம்
"நான் குற்றவாளி!"




"சமுத்திர குமாரி! உனக்கு என்னை நினைவிருக்கிறதா...?"

பொன்னியின் செல்வ! இது என்ன கேள்வி! யாரைப் பார்த்து 'நினைவிருக்கிறதா?' என்று கேட்கிறீர்கள்? ஆயிரமாயிரம் ஆண்டுகள் கலந்து பழகிய பின்னர் 'நினைவிருக்கிறதா?' என்று கேட்பது தகுமா? அல்லது தங்களுக்குத்தான் நினைவில்லாமல் போய்விட்டதா? எத்தனை யுகம் என்னுடைய சின்னஞ்சிறு படகில் தாங்கள் ஏறி வந்திருக்கிறீர்கள்? கடலில், முடிவில்லாத கடலில், எல்லையில்லாத வெள்ள அலைகளுக்குகிடையில், நாம் இருவரும் என் சிறு படகில் ஏறிக்கொண்டு உல்லாச யாத்திரை செய்ததையெல்லாம் மறந்து விட்டீர்களா? திடீரென்று நாலாபுறமும் கரிய இருள் சூழ்ந்து வர, நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக, ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக்கொண்டு நெடுங்காலம் நின்றதை மறந்து விட்டீர்களா? பயங்கரமான புயல்காற்று அடித்தபோது, மலைமலையாக எழுந்த பேரலைகள் நம்முடைய படகைத் தாக்கி, ஒரு கணம் நம்மை வான மண்டலத்துக்கு உயர்த்தி, மறுகணம் பாதாளத்தில் அழுத்தி, இப்படியெல்லாம் அல்லோலகல்லோலம் செய்த நாட்களில், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரமாக நின்று அக்கொடும்புயலை எதிர்த்து வென்றதை மறந்துவிட்டீர்களா? ஒருசமயம் வான வௌியில் நாம் பறந்து பறந்து பறந்து சென்று கொண்டிருந்தோமே, அதை மறந்துவிட்டீர்களா? விண்மீன்களைத் தாங்கள் தாவிப் பிடித்து என் தலையில் ஆபரணங்களாகச் சூட்டினீர்களே, அதுவும் மறந்துவிட்டதா? பூரண சந்திரனை என் முகத்தருகிலே கொண்டு வந்து, 'இதோ இந்த வெள்ளித் தகட்டில் உன் பொன் முகத்தைப் பார்!' என்று சொல்லிக் காட்டினீர்களே, அதையும் மறந்துவிட்டீர்களா? மற்றொரு சமயம் ஆழ்கடலிலே தாங்கள் மூழ்கினீர்கள்; நான் உள்ளம் பதைபதைத்து நின்றேன்; சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு கைகளிலும் முத்துக்களையும் பவழங்களையும் எடுத்துக் கொண்டு வௌிவந்து அவற்றை மாலையாகக் கோத்து என் கழுத்தில் சூட்டினீர்கள்! அதைத் தாங்கள் மறந்துவிட்டாலும் நான் மறக்க முடியுமா? அரசே! உச்சி வேளைகளில், நீலநிறம் ததும்பிய ஏரிக்கரைகளில், பூங்கொத்துக்களின் பாரம் தாங்காமல் மரக்கிளைகள் வந்து வளைந்து அலங்காரப் பந்தல் போட்ட இடங்களில், பசும்புல் பாய்களில், நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் எத்தனை எத்தனை எத்தனையோ நாட்கள் கழித்தோமே, அதையெல்லாம் மறந்துவிட முடியுமா? அந்த நேரங்களில் மரக்கிளைகளில் நூறு ஜோடிக் குயில்கள் உட்கார்ந்து கீதமிசைத்ததையும், ஆயிரம் பதினாயிரம் வண்டுகள் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்ததையும், கோடிகோடி பட்டுப்பூச்சிகள் பல வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு ஆனந்த நடனம் ஆடியதையும் நான் என்றேனும் மறக்க முடியுமா? எத்தனை ஜன்மங்களிலும் மறக்க முடியுமா? என்னைப் பார்த்து 'நினைவிருக்கிறதா?' என்று கேட்டீர்களே, அப்படிக் கேட்கலாமா? நினைவிருக்கிறது, ஐயா, நன்றாக நினைவிருக்கிறது!..." இவ்வாறெல்லாம் சொல்ல வேண்டும் என்று அந்தபேதைப் பெண்ணின் உள்ளம் துள்ளித் துடித்தது.

ஆனால் அவளுடைய பவள இதழ்களோ, "நினைவிருக்கிறது!" என்ற இரு சொற்களை மட்டுமே முணு முணுத்தன.

"ஆகா! சமுத்திரகுமாரி, நீ வாய் திறந்து பேசுகிறாயே! இந்த அதிசயமான இலங்கைத் தீவிலே உள்ள எத்தனையோ மணிமாட மண்டபங்களின் தூண்களில் அழகிய தேவ கன்னிகைகளின் சிலைகளை அமைந்திருக்கிறார்கள்! ஒருவேளை அத்தகைய சிலைவடிவமோ நீ, என்று நினைத்தேன். நல்ல வேளையாக நீ வாய்திறந்து பேசுகிறாய். இன்னும் சில வார்த்தைகள் சொல்! உன் இனிய குரலைக் கேட்க எனக்கு எவ்வளவோ ஆசையாயிருக்கிறது.நம் சேநாபதியிடம் நீ சில விஷயங்களைச் சொன்னாயாம். தொண்டைமான் நதியில் இரண்டு பெரிய மரக்கலங்கள் வந்து மறைவான இடத்தில் ஒதுங்கியிருப்பதாயும் அவை நிறையப் போர்வீரர்கள் வந்திருப்பதாயும் சொன்னாயாம். அது உண்மைதானே, சமுத்திரகுமாரி? அந்தக் கப்பல்களை உன் கண்களினால் நீயே பார்த்தாயா?" என்று இளவரசர் கேட்டார்.

"ஆம், ஐயா, என் கண்களினால் பார்த்தேன்!" என்றாள் பூங்குழலி.

"ஆகா! இப்போது கொஞ்சம் உன் குரலைக் கேட்க முடிகிறது. என் செவிகள் இன்பமடைகின்றன. நல்லது; மரக்கலங்களைப் பார்த்ததும் நீ உன் படகை ஒரு குறுகிய கால்வாயில் விட்டுக் கொண்டு போனாய். கப்பல்கள் போகும் வரையில் காத்திருப்பதற்காக அடர்ந்த காட்டினுள் புகுந்து மறைவான இடத்தில் படுத்துக் கொண்டிருந்தாய். அச்சமயம் கப்பல்களிலிருந்து இறங்கிய வீரர்கள் சிலர் அங்கே வந்தார்கள். நீ படுத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர்கள் நின்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க வேண்டும் என்று நீ விரும்பவில்லை. உன் விருப்பமில்லாமலே அவர்கள் பேச்சு உன் காதில் விழுந்தது. நீ கேட்கும்படி நேர்ந்தது. இவையெல்லாம் நம் சேநாதிபதியிடம் நீ கூறியவை தானே?"

"நடந்ததை நடந்தபடியே கூறினேன்."

"அவர்களுடைய பேச்சைக் கேட்டது அதைப்பற்றி உடனே சேநாதிபதியிடம் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று உனக்குத் தோன்றியது. வீரர்கள் அப்பால் போன உடனே நீ புறப்பட்டாய். சேநாதிபதி இருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு விரைந்து வந்தாய்! எப்படி வந்தாய், சமுத்திரகுமாரி?"

"பாதி வழி படகில் வந்தேன்; பிறகு காட்டு வழியில் நடந்து வந்தேன்."

"எங்கே போகும் உத்தேசத்துடன் கிளம்பினாய், அம்மா?"

"சேநாதிபதி மாதோட்ட நகரில் இருப்பார் என்று எண்ணி அங்கே போகும் உத்தேசத்துடன் வந்தேன்.வழியில் மகிந்தலையில் இருப்பதாக அறிந்தேன். சேநாதிபதியைப் பார்த்துச் சொல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. எத்தனை பேர் குறுக்கே நின்று தடுப்பது?" என்று சொல்லிப் பூங்குழலி சேநாதிபதி நின்ற பக்கம் நோக்கினாள்.அவளுடைய பார்வையில் கோடைகாலத்து இடிமுழக்கத்துக்கு முன்னால் தோன்றும் மின்வெட்டு ஜொலித்தது.

"சேநாதிபதியைப் பார்ப்பது என்றால் இலேசான காரியமா? இதோநிற்கும் என் சிநேகிதர் உன்னைப்போலவே சேநாதிபதியைப் பார்க்க முயன்று அடைந்த கஷ்டத்தைக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய். தடைகளைப் பொருட்படுத்தாமல் நீ பிடிவாதம் பிடித்துச் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னதே நல்லதாய்ப் போயிற்றுப் பூங்குழலி! சேநாதிபதியிடம் கூறியதை என்னிடமும் ஒருதடவை கூறுவாயா? மரத்தின் மறைவிலிருந்து நீ கேட்டாயே அப்போது அந்த வீரர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள்?"

"அரசே! அதைச் சொல்வதற்கு என் நாகூசுகிறது."

"பெரிய மனது பண்ணி எனக்காக இன்னொரு தடவை சொல்!"

"தங்களை சிறைப்படுத்திக்கொண்டு போவதற்காக அவர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்."

"யாருடைய கட்டளையின் பேரில் அவ்விதம் வந்தார்கள் என்பது பற்றி ஏதாவது பேசிக்கொண்டார்களா?"

"அதை நான் நம்பவில்லை, ஐயா! பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்."

"உன்னுடைய கருத்தைப் பிறகு தெரிவிக்கலாம். அவர்கள் பேசிக்கொண்டதை மட்டும் சொல், சமுத்திரகுமாரி!"

"சக்கரவர்த்தியின் கட்டளை என்று பேசிக்கொண்டார்கள்."

"ரொம்ப நல்லது; அதற்குக் காரணம் ஏதாவது சொல்லிக் கொண்டார்களா?"

"சொல்லிக்கொண்டார்கள். தாங்கள் இந்த நாட்டிலுள்ள புத்த குருக்களுடன் சேர்ந்து கொண்டு இலங்கை ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தீர்களாம்... இவ்விதம் சொன்ன அந்தப் பாவிகளை அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று எனக்குக் கோபமாக வந்தது."

"நல்ல காரியம் செய்ய எத்தனித்தாய்! சக்கரவர்த்தியின் தூதர்களை எந்தவிதத்திலும் தடை செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா...? நல்லது; இன்னும் அவர்கள் முக்கியமான விஷயம் ஏதேனும் சொன்னதாக உனக்கு ஞாபகம் இருக்கிறதா?"

"சேநாதிபதிக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியக் கூடாது என்றும், தெரிந்தால் தங்களைத் தப்புவிக்க அவர் பிரயத்தனம் செய்யலாம் என்றும் சொன்னார்கள். ஆகையால் தாங்கள் இருக்குமிடம் தெரிந்து கொண்டு நேரில் தங்களிடம் கட்டளையைக் கொடுத்துக் கையோடு அழைத்துப் போக வேண்டும் என்றும் சொன்னார்கள்..."

"ஆகையால் நீ உடனே சேநாதிபதியைத் தேடிக்கொண்டு புறப்பட்டாயாக்கும். எனக்குப் பெரிய உதவி செய்தாய். சமுத்திரகுமாரி! சற்று அப்பால் இரு. இவர்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் கலந்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முன் மாதிரி ரொம்ப தூரம் ஓடிப்போய் விடாதே. மறுபடியும் உன்னைப் பிடித்துக் கொண்டு வருவதற்கு வந்தியத்தேவரை அனுப்பும்படி செய்துவிடாதே!" சமுத்திர குமாரி சற்று நகர்ந்து ஒரு தூணின் அருகில் நின்று கொண்டாள். இளவரசரின் முகத்தைப் பார்க்கக்கூடிய இடத்திலேதான் நின்றாள்.

தேன் குடத்தில் முழுகிய இரு வண்டுகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. மெதுவாகச் சமாளித்துக் கரைக்கு வந்து பிறகு தேனைச் சுவை பார்த்துக் களிக்கத் தொடங்கின. பூங்குழலியின் கண்களும் இப்போது அத்தகைய சௌகரியமான நிலையில் இருந்தன. இளவரசரின் முக சௌந்தரியமாகிய தேனை அவை பருகித் திளைத்தன. அவளுடைய உள்ளமோ நெஞ்சுக்குள் கட்டுப்பட்டு நிற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. நெஞ்சை வெடித்துக் கொண்டு வௌியேறி வான வௌியெங்கும் பொங்கி நிறைந்துவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தது.

இளவரசர் சேநாதிபதி பூதி விக்கரம் கேசரியைப் பார்த்து "ஐயா! பரம்பரையாக எங்கள் குடும்பத்துக்குச் சிநேகிதமான குலத்தின் தலைவர் தாங்கள். என் தந்தையின் உற்ற நண்பர்: தங்களை நான் என் தந்தைக்கு இணையாகவே மதித்து வந்திருக்கிறேன். தாங்களும் என்னைத் தங்கள் சொந்தப் புதல்வனாகவே கருதிப் பாராட்டி வந்திருக்கிறீர்கள். ஆகையால் இச்சமயம் என்னுடைய கடமையைச் செய்வதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்குக் குறுக்கே நிற்கக் கூடாது!" என்றார்.

சேநாதிபதி மறுமொழி சொல்வதற்குள் பார்த்திபேந்திரனையும் திரும்பிப் பார்த்து, "ஐயா! தங்களையும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் என் அருமைத் தமையனாரின் உற்ற நண்பர். என் தமையனாரின் வாக்கைத் தெய்வத்தின் வாக்காக மதித்து நான் போற்றுகிறவன். ஆகையால் தங்களுடைய வார்த்தையையும் மதித்துப் போற்றக் கடமைப்பட்டவன். தங்களைப் பெரிதும் வேண்டிக் கொள்கிறேன். என் கடமையை நான் நிறைவேற்றுவதற்குத் தடை எதுவும் சொல்லக்கூடாது!" என்றார்.

சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பார்வையின் மூலம் ஒருவருடைய பயத்தை இன்னொருவருக்குத் தெரிவித்துக் கொண்டார்கள். சேநாதிபதி இளவரசரைப் பார்த்து, "இளவரசே! தாங்கள் கூறுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. வாழ்நாளெல்லாம் நான் போர்க்களத்திலே கழித்தவன். மூடுமந்திரமாகப் பேசினால் தெரிந்துகொள்ள இயலாதவன். தங்களுடைய கடமையைச் செய்யப்போவதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால் என்ன? எந்தக் கடமையை, என்ன மாதிரி செய்யப் போவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"இச்சமயம் என்னுடைய கடமை ஒன்றே ஒன்றுதான். என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றி வைக்க வேண்டியதுதான். என்னைச் சிறைப்படுத்திக்கொண்டு வரும்படியான கட்டளையுடன் என் தந்தை ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார். என்னை அவர்கள் தேடி அலையும்படியாக ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? நானே அவர்கள் இருக்குமிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்துவிடுவேன். அதுவே இப்போது நான் செய்ய வேண்டிய கடமை..."

"முடியவே முடியாத காரியம்.என் உடம்பில் உயிருள்ள வரையில் அதை நான் அநுமதிக்க மாட்டேன். தடுத்தே தீருவேன்!" என்றான் பார்த்திபேந்திரன்.

சேநாதிபதி அவனைப் பார்த்து, "பதறவேண்டாம்; பொறுங்கள்!" என்றார். பின்னர் இளவரசரை நோக்கிக் கூறினார்.

"ஐயா! தங்களுடைய கடமையைப் பற்றிச் சொன்னீர்கள். எனக்கும் ஒரு கடமை இருக்கிறது. அருள் புரிந்து அதைக் கேட்கவேண்டும். கொடும்பாளூர் வேளார் பெருங்குடியில் இன்று உயிரோடிருக்கும் ஆண் மகன் நான் ஒருவன்தான். மற்றவர்கள் அனைவரும் சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் இறந்து போனார்கள். அநேகமாக எல்லாரும் போர்க்களத்தில் மடிந்தார்கள். நானும் ஒருநாள் அவ்விதம் இறந்து போவேன். யார் கண்டது? ஆகையால் என் வார்த்தையைக் கொஞ்சம் பொறுமையுடன் கேட்கவேண்டும். அரண்மனை மாடங்களில் அருமையாக வளர்க்கப்பட்டு வந்த தங்களைச் சென்ற ஆண்டில் தென்திசைப் படைகளின் மாதண்ட நாயகராகச் சக்கரவர்த்தி நியமித்தார். அப்போது என்னைத் தனியாக அழைத்துச் சொன்னார்: 'இளவரசன் என்னை விட்டுப்பிரிவது என் உயிரே உடலிலிருந்து பிரிவது போலிருக்கிறது. ஆயினும் என்னுடைய ஆசைக்காக அவனை நான் அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்க்கக் கூடாது. அவன் வௌியேறிப் போக வேண்டியதுதான்; அண்ணனைப்போல் வீரன் என்று பெயர் எடுக்கவேண்டியதுதான். ஆனால் அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அதே கணத்தில் என் உயிரும் போய்விடும். அவனுக்கு எவ்வித அபாயமும் நேராமல் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு...' இவ்வாறு சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். சென்ற ஆண்டில் அவ்வாறு கூறிய சக்கரவர்த்தி இப்போது தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடுவாரா? அவ்வாறு கட்டளையிடும்படியாகத் தாங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் சூழ்ச்சி செய்ததாகச் சொல்வது எவ்வளவு அபத்தம்? இந்த அபவாதத்தை யாராவது நம்ப முடியுமா?..."

கொடும்பாளூர்ப் பெரிய வேளார் கூறி வந்ததை இதுவரை பொறுமையுடன் கேட்டு வந்த இளவரசர் இப்போது குறுக்கிட்டார்.

"வேறு யாராவது நம்ப முடியாதோ, என்னமோ? ஆனால் என்னால் நம்ப முடியும்!" என்றார்.

"என்ன சொல்கிறீர்கள், இளவரசே!"

"இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்ற நான் சூழ்ச்சி செய்தது உண்மைதான் என்று சொல்கிறேன்?"

வந்தியத்தேவன் இப்போது முன்னால் வந்து, "இது என்ன ஐயா! சற்று முன் வரையில் சத்தியம் - தர்மம் என்று சொல்லி வந்தீர்கள். இப்போது இப்படிப் பெரும் பொய் சொல்கிறீர்களே!... சேநாதிபதி ! இவர் வார்த்தையை நீங்கள் நம்பவேண்டாம். நேற்றிரவு புத்த குருக்களின் மகாசபையார் இவருக்கு இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் அளித்தார்கள் இவர் வேண்டாம் என்று மறுதளித்தார். இதற்கு நானும் இதோ நிற்கும் இந்த வைஷ்ணவனும் சாட்சி!"என்றான்.

பொன்னியின் செல்வர் புன்னகை புரிந்து, "வந்தியத்தேவரே! ஒரு கேள்வி! சூழ்ச்சி செய்கிறவர்கள் சாட்சி வைத்துக் கொண்டு சூழ்ச்சி செய்வார்களா? நீங்கள் இருவரும் பக்கத்தில் இருந்ததினாலேயே நான் இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் மறுதளித்திருக்கலாம் அல்லவா?" என்றார்.

வந்தியத்தேவன் அசந்துபோனான்! இதற்கு எதிராக அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இளவரசர் மேலும் கூறினார்: "வாணர்குல வீரரே! உமக்குச் சந்தேகம் இருந்தால் அதோ நிற்கும் வைஷ்ணவரைக் கேட்கலாம். முதன்மந்திரி அநிருத்தப் பிரமராயர் அவரிடம் என்ன சொல்லி அனுப்பினார் என்று கேட்டு அறிந்து கொள்ளலாம். 'புத்த குருமார்கள் தங்களுக்கு இலங்கைச் சிம்மாசனம் அளிக்க முன்வருவார்கள். சாட்சியம் வைத்துக் கொண்டு அதை மறுதளிக்கவும்' என்று சொல்லி அனுப்பினாரா, இல்லையா என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்!" இதைக்கேட்டு அங்கிருந்த எல்லாருமே திகைத்துப்போய் நின்றார்கள்.

இளவரசர் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னார்: "ஐயா! இதைக்கேளுங்கள். இந்த இலங்கையைக் கவர்ந்து ஆளவேண்டும் என்று பேராசை என் மனத்தில் இருந்தது உண்மை.இந்தப் பேராசையை எனக்கு உண்டு பண்ணியவர் என் தமக்கையார். 'தம்பி! நீ நாடு ஆளப் பிறந்தவன். உன் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது. இங்கே உனக்கு இடம் இல்லை. ஆகையால் இலங்கைக்குப் போ! இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொள்!' என்று இப்படியெல்லாம் இளையபிராட்டி அடிக்கடி சொல்லி என் மனத்தில் ஆசையை வளர்த்து விட்டார். ஆகையால் நான் குற்றவாளிதான், சக்கரவர்த்தி என்னைச் சிறைபடுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதற்குக் காரணம் இருக்கிறது..."

"கொஞ்சம் பொறுங்கள், இளவரசே! அப்படித் தங்கள் மனத்தில் எண்ணம் உதித்திருந்தால் அது இந்த இலங்கைத் தீவின் பாக்கியம். அதற்குப் பொறுப்பாளியும் தாங்கள் அல்ல; தங்கள் தமக்கையார் இளைய பிராட்டியும் அல்ல. சுந்தர சோழ சக்கரவர்த்திதான் அதற்குப் பொறுப்பாளி அவரே என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்; தங்களை இலங்கைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துப்பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். குந்தவை தேவியிடம் இதைப் பற்றி முதன் முதலில் கூறியவரும் சக்கரவர்த்தி தான். தங்கள் தந்தையின் விருப்பத்தையே தமக்கையார் தங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். ஆகையால் தாங்கள் குற்றவாளி அல்ல..."

"சேநாதிபதி! அப்படியானால் என் தந்தையிடம் போவதற்கு நான் ஏன் தயங்கவேண்டும்? அவரிடம் நடந்தது நடந்தபடி சொல்கிறேன். இதோ இருக்கும் இந்த இரண்டு பேரும் எனக்காகச் சாட்சி சொல்லட்டும். பிறகு சக்கரவர்த்தி என்ன கட்டளை இடுகிறாரோ, அதன்படி நடந்துகொள்வது என் கடமை..."

பார்த்திபேந்திரன் இப்போது அனல் கக்கும் குரலில் கூறினான்: "சேநாதிபதி ஏதேதோ வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறோம். இனியும் மூடி மறைப்பதில் பயன் ஒன்றுமில்லை இளவரசரிடம் உண்மையைச் சொல்லியே தீரவேண்டும். தாங்கள் சொல்கிறீர்களா அல்லது நான் சொல்லட்டுமா!"

"நானே சொல்கிறேன்; பொறுங்கள்!" என்றார் சேநாதிபதி. அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் கூறினார்: "இளவரசே! தங்களுடைய களங்கமற்ற உள்ளத்தை மாசுபடுத்த வேண்டாம் என்று எண்ணியது பயன்படவில்லை. ஒரு விரஸமான விஷயத்தைப் பற்றித் தங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரிய பழுவேட்டரையர் இந்த முதிய பிராயத்தில் நந்தினி என்னும் பெண்ணை மணம் புரிந்து கொண்டிருப்பது தங்களுக்குத் தெரிந்த விஷயமே.அவள் ஒரு சூனியக்காரி. பயங்கரமான மாய மந்திர வித்தைகள் அவளுக்குத் தெரிந்திருக்கின்றன. அவற்றின் உதவியால் பெரிய பழுவேட்டரையரை அவள் தன் காலடியில் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் தன் காலால் இட்ட பணியை இவர் தலையில் ஏந்தி நிறைவேற்றி வைக்கிறார். பழங்குடியில் பிறந்து, பல வீரச் செயல்கள் புரிந்த அந்தப் பெரியவருக்கு விதி வசத்தால் இந்த மாதிரி துர்க்கதி சம்பவித்து விட்டது."

"சேநாதிபதி! இது நான் கேள்விப்படாதது அல்லவே? சோழ தேசத்தில் நாடு நகரமெல்லாம் பேசிக்கொள்ளும் விஷயந்தானே?" என்றார் இளவரசர்.

"அந்த மந்திரக்காரி நந்தினியின் சக்தி இதுவரையில் பழுவேட்டரையர்களை மட்டும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. இளவரசே! மன்னிக்க வேண்டும்! இப்போது அவள் சக்கரவர்த்தியின் பேரிலும் தன்னுடைய மந்திரத்தைப் போட ஆரம்பித்து விட்டாள். அதனால்தான் இத்தகைய கட்டளையை, - தங்களைச் சிறைப்படுத்தி வரும்படியான கட்டளையை, சக்கரவர்த்தி பிறப்பித்திருக்கிறார்!..."

"சேநாதிபதி! எச்சரிக்கை! சக்கரவர்த்தியைப் பற்றிக் கௌரவக் குறைவாக எதுவும் சொல்ல வேண்டாம். என் தந்தையின் உடம்பில் உயிர் உள்ளவரையில் அவர் இடும் கட்டளை எதுவானாலும், எந்தச் சந்தர்ப்பத்தில் இடப்பட்டாலும், அதுவே தெய்வத்தின் கட்டளையாகும்..."

"அதை நாங்கள் மறுக்கவில்லை, இளவரசே! சக்கரவர்த்தியின் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி அவருடைய உயிருக்கே அபாயம் வந்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறோம். நந்தினியைப் பற்றிய முழு உண்மையை நேற்றுவரை நானே அறிந்து கொள்ளவில்லை. நேற்றிரவுதான் பார்த்திபேந்திரன் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அந்தப் பயங்கரமான விஷயத்தைத் தாங்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

"மூன்று வருஷத்துக்கு முன்னால் மதுரைக்கு அருகில் வீர பாண்டியனோடு இறுதி யுத்தம் நடந்தது அல்லவா? அப்போது தங்கள் தமையனால் கரிகாலரும் இதோ உள்ள பார்த்திபேந்திரரும் நானும் கலந்தாலோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து வந்தோம். பாண்டியனுடைய சைனியங்கள் அடியோடு நிர்மூலமாயின. வீரபாண்டியன் முன்னொரு தடவை பாலைவனத்தில் ஓடி ஓளிந்ததுபோல் இப்போதும் ஓடித் தப்பிக்க முயன்றான்.அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று நாங்கள் மூவரும் அவனை எப்படியாவது கைப்பற்றத் தீர்மானித்துப் பெரு முயற்சி செய்தோம். இந்தத் தடவை வீர பாண்டியனுடைய தலையைக் கொண்டு போகாமல் தஞ்சாவூருக்குத் திரும்புவதில்லை என்று நாங்கள் மூவரும் சபதம் செய்திருந்தோம்.ஆகையால் வேறு யாரையும் நம்புவதில்லையென்று நாங்களே அவனைத் தொடர்ந்து சென்றோம். கடைசியாக ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த குடிசையில் அவன் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். குடிசைக்கு வௌியில் எங்களைக் காவலுக்கு நிறுத்தி வைத்து விட்டுத் தங்கள் அண்ணன் கரிகாலர்தான் உள்ளே நுழைந்தார். வீர பாண்டியனைக் கொன்று அவன் தலையை எடுத்து வந்தார். நாங்களும் எங்கள் காரியம் முடிந்துவிட்டதென்று குதூகலமாகத் திரும்பிச் சென்றோம். ஆனால் அந்தக் குடிசைக்குள்ளே ஒரு சிறிய நாடகம் நடந்ததென்பது எங்களுக்குத் தெரியாது. வீர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த பெண் ஒருத்தி குறுக்கே நின்று தடுத்துத் தன் காதலனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். கரிகாலர் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு வீரபாண்டியனுடைய தலையைக் கொய்து வௌியே எடுத்து வந்தார். இளவரசே! அவ்விதம் சோழ குலத்தின் ஜன்ம சத்துருவான வீர பாண்டியனைக் காப்பாற்ற முயன்றவள்தான் நந்தினி! அவள்தான் பிற்பாடு எழுபது வயதுக்கிழவரை மணந்து தஞ்சாவூருக்கு வந்து, 'பழுவூர் இளைய ராணி' யாக விளங்குகிறாள்! அவள் எதற்காக, என்ன நோக்கத்துடன், - வந்திருப்பாள் என்பதை நாம் ஊகிக்கலாம் அல்லவா? வீர பாண்டியனுக்காகப் பழிக்குப் பழி வாங்கத்தான் வந்திருக்கிறாள். சோழ குலத்தை அடியோடு நிர்மூலமாக்கி விடுவதற்காக வந்திருக்கிறாள். அவள் அருகில் சென்றவர் யாரும் அவளுடைய மோக வலையிலிருந்து தப்பித் திரும்புவது கடினம். அதோ நிற்கும் வந்தியத்தேவன் அதற்குச் சாட்சி சொல்லுவான். சோழ குலத்தைப் பூண்டோடு அழித்துவிடப் பயங்கர சபதம் எடுத்திருக்கும் கூட்டத்தைப்பற்றி அதோ நிற்கும் வைஷ்ணவன் சாட்சி சொல்வான். அவர்களுக்கு அவசியமான பணத்தையெல்லாம் நந்தினி தான் கொடுக்கிறாள்.இளவரசே! துரதிஷ்ட வசமாக நம் சக்கரவர்த்திப் பெருமானும் அந்தப் பாதகியின் வலையில் விழுந்து விட்டதாகக் காண்கிறது. மதுராந்தகத் தேவனுக்குப் பட்டம் கட்டுவது பற்றிச் சக்கரவர்த்தியே யோசித்து வருவதாகத் தெரிகிறது. ஆகையால் சக்கரவர்த்தியின் கட்டளையென்று கருதித் தாங்கள் தஞ்சைக்குப் போவதற்கு இது தருணமல்ல..."

"சேநாதிபதி! தாங்கள் கூறிய செய்திகள் எனக்கு மிக்க வியப்பை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆயினும் அச்செய்திகளில் நான் செய்த முடிவுதான் உறுதிப்படுகிறது. என் தந்தையை அவ்வளவு பயங்கரமான அபாயங்கள் சூழ்ந்திருக்கும்போது நான் இருக்க வேண்டிய இடம் அவர் அருகிலேதான். இலங்கை அரசு எனக்கு என்னத்திற்கு? அல்லது இந்த உயிர்தான் என்னத்திற்கு? இனி யோசனை ஒன்றுமே தேவையில்லை. என்னைத் தடை செய்வதற்கு யாரும் முயலவேண்டாம்!" என்று இளவரசர் கம்பீரமாகக் கூறினார். பிறகு, சற்றுத் தூரத்தில் தூணில் சாய்ந்து கொண்டு தம்மைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பூங்குழலியின் மீது அவர் கண்கள் சென்றன.

"சமுத்திர குமாரி! சற்று இப்படி அருகில் வா!" என்றார். பூங்குழலி நெருங்கி வந்தாள். "பெண்ணே! நீ கொண்டுவந்த செய்தியின் மூலம் எனக்குப் பெரிய உதவி செய்தாய். இன்னும் ஓர் உபகாரம் எனக்கு நீ செய்ய வேண்டும். செய்வாயா?" என்று கேட்டார்.

'அடடா! இது என்ன? இந்த ஏழைப் படகுக்காரியிடமா இவர் உதவி கோருகிறார்? இவருக்குக் குற்றேவல் செய்யும் பாக்கியத்தை நாடி வந்தேன்; இவர் என்னிடம் உதவி வேண்டும் என்று யாசிக்கிறாரே! கடவுளிடம் வரம் கேட்க வந்தேன்; கடவுள் தம் திருக் கரங்களை நீட்டி என்னிடம் 'பிச்சை போடு' என்று கேட்கிறாரே?' இவ்வாறு மனத்தில் எண்ணி, "இளவரசே! தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்!" என்றாள் பூங்குழலி.

"சமுத்திரகுமாரி! என்னைத் தேடிக் கொண்டு இரண்டு மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்று முகத்துவாரத்தின் அருகில் காத்திருக்கின்றன என்று சொன்னாய் அல்லவா? அந்த இடத்துக்கு நான் அதி சீக்கிரமாகப் போய்ச் சேரவேண்டும். எனக்கு வழிகாட்டி அழைத்துக்கொண்டு போவாயா?"

"பெண்ணே! 'முடியாது' என்று சொல்!" என்பதாக ஒரு குரல் கர்ஜித்தது. அது சேநாதிபதியின் குரல்தான் என்பதைப் பூங்குழலி உணர்ந்தாள்.

இத்தனை நேரமும் ஏதோ ஒரு சொப்பன லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதுதான் தன் நெருக்கடியான நிலைமை தெரிந்தது. எந்த அபாயத்திலிருந்து இளவரசரைத் தப்புவிக்கலாம் என்ற ஆசையுடன் இவள் அவசர அவசரமாக ஓடி வந்தாளோ, அந்த அபாயத்தின் வாயிலிலேயே கொண்டு சேர்க்கும்படி இளவரசர் இப்போது தன்னைக் கேட்டுக்கொள்கிறார்! பெண்ணே! 'முடியாது' என்று சொல்!" - சேநாதிபதியின் இந்தக் கட்டளையின் பொருள் அவளுக்கு இப்போது புலனாயிற்று. நாலாபுறத்திலிருந்தும் ஆயிரம் குரல்கள் அதே கட்டளையை அவளுக்கு இட்டன. மரங்கள் அவ்வாறு முழங்கின; மண்டபத்தின் தூண்கள் அவ்விதம் அலறின; மரக்கிளைகளின் மேலிருந்து பறவைகள் கதறின.

ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. 'பூங்குழலி! இதோ உன் அதிர்ஷ்டம்! இளவரசருக்கு வழிகாட்டி அழைத்துப் போவாயானால் அவருடன் இரண்டு தினங்கள் கழிக்கலாம். அவர் அருகில் நீ இருக்கலாம். அவர் உன்னைப் பாராதபோது அவரை நீ பார்க்கலாம். அவர் மீது பட்டு வரும் காற்று உன்மீதும் படும். அவருடைய குரல் உன் காதில் அடிக்கடி கேட்கும்.அடி பெண்ணே!" நீ கண்டு வந்த எட்டாத கனவில் ஒரு சிறிது நிறைவேறும். பிறகு அது எப்படியானால் என்ன? பூங்குழலி! ஒத்துக்கொள்!" என்று அந்த மெல்லிய குரல் அவள் மனக் காதில் கூறியது.

"சமுத்திரகுமாரி! ஏன் தயங்குகிறாய்? எனக்கு இந்த உதவி நீ செய்ய மாட்டாயா? நானே வழி கண்டுபிடித்துக் கொண்டு போக வேண்டியதுதானா?" என்று இளவரசர் கூறியது அவளுடைய மனம் திடமடையக் காரணமாயிற்று.

"இளவரசே! வழிகாட்ட நான் வருகிறேன்!" என்றாள்.

சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி அப்போது தம் தொண்டையைக் கனைத்துக் கொண்ட சப்தம் பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னால் பூமியின் கர்ப்பத்திலிருந்து எழுகின்ற பயங்கரத் தொனியை நிகர்த்திருந்தது. அவர் ஓர் அடி முன்னால் வது கூறினார்:- "இளவரசே! தங்கள் விருப்பத்துக்குக் குறுக்கே நான் நிற்கமாட்டேன். ஆனாலும் என் வேண்டுகோள் ஒன்றுக்குச் செவி சாய்க்க வேணும். தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களிடம் தங்களை ஒப்படைக்கும் வரையில் தங்களைப் பாதுகாப்பது என்பொறுப்பு. நேற்றிரவு தங்களைக் கொல்ல நடந்த முயற்சிகளைப் பற்றிச் சற்று முன்னால் தங்கள் தோழர்கள் சொன்னார்கள். அந்தக் கொலைகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை. அவர்கள் யாரென்று தெரியவும் இல்லை. என் மனத்தில் உள்ளதைச் சொல்வதற்காக மன்னியுங்கள். இந்தப் பெண்ணின் பேரிலேயே எனக்குக் கொஞ்சம் சந்தேகமுண்டு.அந்தக் கொலைகாரர்களுக்கு இவளும் ஒருவேளை உடந்தையாயிருக்கலாம் அல்லவா? மரக்கலங்களில் தங்களைச் சிறைப்படுத்தி அழைத்துப்போக வந்திருக்கிறார்கள் என்பதே இவளுடைய கற்பனையாயிருக்கலாம் அல்லவா? ஏன் இருக்கக் கூடாது? சற்றுமுன்னால் இவளுடைய கத்தியைத் தங்கள் தோழர் வந்தியத்தேவர் பிடுங்கி எறிந்தபோது, அது யார் பேரிலோ விழுந்து ஓலக்குரல் கேட்டதே? அது யாருடைய குரல்? இந்தப் பெண் தாராளமாக வழி காட்டிக் கொண்டு வரட்டும். நம்முடைய யானை மேல் ஏறிக்கொண்டு முன்னால் செல்லட்டும். ஆனால் தங்களுடன் நானும் தொண்டைமான் ஆற்றில் உள்ள கப்பல்களைக் காணும் வரையில் வந்தே தீருவேன்! அது என்னுடைய கடமை!"

சேநாதிபதி இந்தப் பேச்சைப் புன்னகை பூத்த முகத்துடன் கேட்டுக்கொண்டு நின்ற இளவரசர், "அப்படியேயாகட்டும்! தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு நானும் குறுக்கே நிற்கவில்லை!" என்றார்.


பக்க தலைப்பு



நாற்பத்துநான்காம்அத்தியாயம்
யானை மிரண்டது!




மேற்கண்டவாறு முடிவு ஏற்பட்டதும் சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி பார்த்திபேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் அந்தரங்கமாகப் பேசினார். பின்னர், தம்முடன் வந்த படைவீரர்களுக்குத் தனித்தனியே சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பார்த்திபேந்திரன் இளவரசரிடம் விடைபெற்றுக் கொண்டான். "ஐயா! நான் வந்த காரியம் நிறைவேறாமல் வெறுங்கையோடு திரும்புகிறேன். இதற்காகக் கரிகாலர் என்னை மிகவும் கோபித்துக்கொள்ளபோகிறார். ஆயினும் என்ன செய்வது? தாங்கள் பிடிவாதமாக இருக்கிறீர்கள். என் பேரில் குற்றமில்லை. இதற்கு இங்குள்ளவர்கள் எல்லாரும் சாட்சி!" என்றான்.

இளவரசர், "அவ்வளவு அவசரமாகப் போகவேண்டுமா? தாங்களும் சேநாதிபதியோடு தொண்டைமானாறு வரை வந்து விட்டுப்போகக்கூடாதா?" என்று கேட்டார்.

"அந்தப்பாதகத்துக்கு நான் உடந்தையாயிருக்க மாட்டேன். நான் வந்த கப்பல் திரிகோணமலையில் நிற்கிறது. அங்கே போய்க் கப்பல் ஏறிக் கூடியசீக்கிரம் நான் காஞ்சிக்குப் போகவேண்டும். கரிகாலரிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும்!" என்றான் பார்த்திபேந்திரன்.

பின்னர் வந்தியத்தேவனைப் பார்த்து, "வல்லத்தரையனே! என்னுடன் நீ காஞ்சிக்கு வரவில்லையா?" என்று கேட்டான்.

வந்தியத்தேவன் சிறிது திடுக்கிட்டு நின்றுவிட்டு, "இல்லை; இளவரசருடன் போக விரும்புகிறேன்" என்றான்.

"நல்லது; என்னுடன் வராததற்காகப் பிறகு வருத்தப்படுவாய்!" என்று சொல்லிவிட்டுப் பார்த்திபேந்திரன் புறப்பட்டான்.

சேநாதிபதியின் கட்டளையின்படி அவனுடன் இன்னும் சில வீரர்களும் கிளம்பிச் சென்றார்கள்.

வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம், "அந்தப் பல்லவன் கூறியதன் பொருள் என்ன? தன்னுடன் வராததற்காக நான் வருத்தப்படுவேன் என்று ஏன் கூறினான்? உமக்கு ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டான்.
"சேநாதிபதியும் அவனும் கலந்து பேசி ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்! அதன் விவரம் இன்னதென்று தானே சீக்கிரத்தில் தெரியும். உண்மையில், இப்போது ஏற்பட்டிருக்கும் சங்கடத்துக்கு மூலகாரணம் இந்தக் கொடும்பாளூர் கிழவர்தான்!" என்றான்.

"அது எப்படி? சேநாதிபதி என்ன செய்திருக்க முடியும்?"

"எல்லாம் அவருடைய வேலைதான். அவருடைய குடும்பப்பெண் ஒருத்தி பழையாறையில் வளர்கிறாள் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?"

"நன்றாய்த் தெரியும். வானதி தேவியைத்தானே சொல்கிறீர்?"

"ஆமாம்; அந்தப் பெண்ணை இளவரசருக்குக் கலியாணம் பண்ணிக் கொடுத்து இலங்கை அரசராக இவருக்கு முடிசூட்டி விட வேண்டும் என்று சேநாதிபதிக்கு ஆசை. பக்த குருக்களைக் கொண்டு இலங்கைக் கிரீடத்தை அளிக்கும்படி ஏவியவர் இவர்தான். இவருடைய முயற்சியை இரகசியமாக வைத்திருக்கவாவது தெரிந்ததா? அதுவும் இல்லை. செய்தி தஞ்சைக்கு எட்டிவிட்டது. அதனால்தான் முதன் மந்திரி அநிருத்தர் இலங்கைக்கு வந்தார்; என்னையும் இளவரசரிடம் அனுப்பி வைத்தார். வந்தியத்தேவா! எது எப்படியானாலும் நம்முடைய உயிரை நாம் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், இளவரசர் இலங்கைச் சிம்மாசனத்தை ஏற்க மறுத்தது பற்றி நீயும் நானும் தஞ்சையில் சாட்சி சொல்லும்படி நேரிடலாம்!"

இதற்குள் சேநாதிபதியின் காரியங்கள் முடிந்துவிட்டன. அவருடன் வந்திருந்த படை வீரர்களில் நாலுபேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வெவ்வேறு திசையில் புறப்பட்டுச் சென்றார்கள். கடைசியாக இளவரசரின் கோஷ்டியும் புறப்பட்டது. இளவரசர், சேநாதிபதி, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் இவர்களுடனே மேற்கூறிய நாலு வீரர்களும் உயர்ந்த சாதிக் குதிரைகள் மீதேறி வடதிசை நோக்கிப் புறப்பட்டார்கள். இவர்களைப் பின்தொடர்ந்து பூங்குழலி ஏறியிருந்த யானை, ஜாம் ஜாம் என்று கம்பீரமாக நடந்து வந்தது. பூங்குழலியைத் தவிர அதன் மீது யானைப் பாகன் ஒருவன் மட்டுமே ஏறிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச தூரம் இராஜ பாட்டை வழியாக அவர்கள் சென்றார்கள். ஆனால் இராஜ பாட்டையில் பிரயாணம் செய்வது சுலபமாக இல்லை, வழியெங்கும் ஜனக் கூட்டமாயிருந்தது. இளவரசர் அவ்வழியில் வருகிறார் என்பதும் எப்படியோ ஜனங்களுக்குத் தெரிந்து போயிருந்தது. இலங்கைத் தீவின் வடபகுதியில் அப்போதெல்லாம் தமிழர்களே அதிகமாக வசித்து வந்தார்கள். அங்கங்கே ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று, "இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!" "சேநாதிபதி கொடும்பாளூர் வேளார் வாழ்க!" என்று கோஷித்தார்கள். சில இடங்களில் ஜனங்கள் குதிரைகளைச் சூழ்ந்துகொண்டு பின் தொடர்ந்து வந்தார்கள். வரவரப் பின் தொடர்ந்து வரும் கூட்டம் அதிகமாக்கிக் கொண்டு வந்தது. குதிரைகள் வேகமாகப் போக முடியவில்லை.

இளவரசர் சேநாதிபதியுடன் இதைப் பற்றி விவாதித்ததின் பேரில் இராஜபட்டையிலிருந்து விலகிக் காட்டு வழியில் போவதென்று தீர்மானமாயிற்று. ஜனங்களை மெதுவாகக் கழித்துக்கட்டி விட்டு அவர்கள் காட்டுவழியில் பிரவேசித்தார்கள். காட்டு வழியில் இயற்கை இடையூறுகள் காரணமாக வேகமாகப் போக முடியவில்லை.கொஞ்ச தூரம் போனதும் தாமரைத் தடாகம் ஒன்று தென்பட்டது. அதன்கரைக்கு வந்ததும் எதிர்க்கரையில் ஒரு பெரிய ஜனக் கும்பல் நிற்பது தெரிந்தது. இவர்களைப் பார்த்தவுடனே அந்த ஜனக் கும்பலின் மத்தியிலிருந்து தாரை, தப்பட்டை, கொம்பு, பேரிகை முதலிய வாத்தியங்களின் பெருமுழக்கம் கிளம்பிற்று. "கொஞ்சம் இருங்கள்; நான் போய் அவர்கள் யார் என்று பார்த்துவிட்டு வருகிறேன்!" என்று கூறிவிட்டுச் சேநாதிபதி குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டு முன்னதாகச் சென்றார். சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து, "இளவரசர் இந்த வழி வருவது எப்படியோ பக்கத்துக் கிராமவாசிகளுக்குத் தெரிந்து போயிருக்கிறது. இளவரசருக்கு மரியாதை செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்!" என்றார்.

ஜனங்கள் நெருங்கி வந்தார்கள். இளவரசரைச் சுற்றிச் சுற்றி வந்து அடங்காத ஆர்வத்துடன் பார்த்தார்கள். பல வகை ஜய கோஷங்களையும் வாழ்த்தொலிகளையும் கிளப்பினார்கள். அவற்றில் "ஈழத்தரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!" என்ற கோஷம் மட்டும் பிரதானமாயிருந்தது. இளவரசர் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அந்த ஜனக்கூட்டத்திற்குத் தலைவன் என்று தோன்றிய ஒருவனை அருகில் அழைத்தார். "இவர்கள் எதற்காக எனக்கு ஈழத்து அரசுப்பட்டம் கட்டுகிறார்கள்?" என்று கேட்டார்.

அவன் மிகப் பணிவுடன், "அரசே பன்னெடுங் காலமாக இந்த ஈழநாடு நிலையான அரசு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வர் ஈழ நாட்டின் மன்னர் ஆக வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இந்நாட்டில் வாழும் எல்லா ஜனங்களுடைய விருப்பமும் அதுதான். தமிழர்கள், சிங்களவர்கள், சைவர்கள், பௌத்தர்கள், துறவிகள் இல்லறத்தார் எல்லாரும் அதையே விரும்புகிறார்கள்" என்று கூறினான். இளவரசருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் விருந்து அளிக்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்தை ஏற்றுக் கொள்ளாமல் போக முடியவில்லை. விருந்துண்ட பிறகு விடை பெற்றுப் புறப்படுவதற்கு வெகு நேரமாகிவிட்டது.

இளவரசருக்கு உபசாரங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் தனித்துப் பேசிக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. "தம்பி! பார்த்தாயா? இதெல்லாம் சேநாதிபதியின் சூழ்ச்சி என்று தெரியவில்லையா? முன்னாலேயே அவசரமாகச் செய்தி அனுப்பி இந்த உபசாரங்களையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"சேநாதிபதியின் ஏற்பாடுதான் என்று ஒருவாறு தெரிகிறது. ஆனால் இந்தச் சூழ்ச்சியின் நோக்கம் என்னவென்று தெரியவில்லையே? இப்படியெல்லாம் இந்தத் தீவில் வாழும் ஜனங்கள் சொல்வதைக் கேட்டு இளவரசர் நேற்று வேண்டாம் என்று மறுத்த சிம்மாசனத்தின் பேரில் இன்றைக்கு ஆசை கொண்டு விடுவார் என்ற எண்ணமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அது ஒரு நோக்கமாயிருக்கலாம். அதைக் காட்டிலும் முக்கியமானது நம் பிரயாணத்தைத் தாமதப்படுத்து